மு.க.ஸ்டாலின்

2019-20க்கான நிதி ரத்து: “பிரதிநிதிகளை அவமதிக்கும் செயல்; மக்களாட்சிக்கு மாறானது” - மு.க.ஸ்டாலின் கண்டனம்

எதிர்க்கட்சி எம்.பிக்கள் எந்த பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கமா? என மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

MK Stalin
MK Stalin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏற்கெனவெ இரண்டு ஆண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைத்துள்ள மத்திய மோடி அரசு தற்போது நடப்பாண்டுக்கான நிதியையும் நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு வருடங்களுக்கு (2020-21 மற்றும் 2021-22) மட்டும் நிறுத்தி வைக்கிறோம் என்று அறிவித்து விட்டு - இப்போது 2019-20-ம் ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு - அதற்கான பணிகள் துவங்கி விட்ட நிலையில் - அந்த நிதியையும் ரத்து செய்ய மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

உரிமையின் அடிப்படையில் கொடுக்க வேண்டியதை, கொடுக்காமல் நிறுத்தி வைப்பதும், கொடுத்ததைப் பாதியில் பறிப்பதும் பண்பாடாகாது. கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சீர்செய்யவோ, நெருக்கடி சூழ்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ தயாராக இல்லாத மத்திய அரசு - இப்படி மக்கள் பிரதிநிதிகளுக்குரிய உரிமைகளையும் பறித்து - மூன்று வருடத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்துவது வேதனையானது மட்டுமல்லாமல் மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் செயலும் ஆகும்.

2019-20க்கான நிதி ரத்து: “பிரதிநிதிகளை அவமதிக்கும் செயல்; மக்களாட்சிக்கு மாறானது” - மு.க.ஸ்டாலின் கண்டனம்

உச்சநீதிமன்றமே அங்கீகரித்துள்ள தொகுதி மேம்பாட்டு நிதியை இப்படி நிறுத்துவது - கொரோனா பணிகளில் மத்திய அரசுக்கே போதுமான ஆர்வம் இல்லையோ என்ற ஐயப்பாட்டினை எழுப்புவதுடன் - எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் தொகுதி மக்களுக்குத் தேவைப்படும் எந்த ஒரு பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு நடந்துகொள்வது மக்களாட்சித் தத்துவத்திற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் மாறானது.

பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களே கூட, இந்த முடிவை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், மவுனமாக வேதனையுறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே 2019-20-ம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி, மக்களுக்குத் துரோகம் இழைத்திடும், "சுற்றறிக்கை"யை மட்டுமின்றி - ஏற்கனவே இரு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உத்தரவையும் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.” என மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories