மு.க.ஸ்டாலின்

”பள்ளிக்கல்வித் துறையும் அ.தி.மு.க அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா?”- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

மாடுப் பொங்கல் தினத்தன்று மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என ஏன் செயல்முறை ஆணையாக வெளியிட வேண்டும் என அரசுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

”பள்ளிக்கல்வித் துறையும் அ.தி.மு.க அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா?”- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாட்டுப் பொங்கல் நாள் அன்று, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் உரையாற்றுவதால் ஜனவரி 16ந்தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு வருமாறு உத்தரவிட்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆற்றும் உரையினைக் காண்பதற்கும், கேட்பதற்கும் 9 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டும் என்று தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொங்கல் விடுமுறையை ரத்து செய்து, தமிழர்களின் மனதில் நீங்காத கோபத்திற்குள்ளான பா.ஜ.க. அரசு, இப்போது பொங்கல் திருநாள் நேரத்தில் இப்படியொரு உரையாற்றும் நிகழ்ச்சியை பிரதமர் மூலம் ஏற்பாடு செய்து, அதைத் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் எல்லாம் தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்டத்திற்கு இடையில் பள்ளிக்கு வந்து கேட்க வேண்டும் என்று “எடுபிடி”அரசு மூலம் கெடுபிடி செய்து ஆணையிடுவது மிகுந்த வேதனைக்குரியது.

ஆகவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 16.1.2020 அன்று பள்ளிக்கூடங்களுக்கு வர வேண்டும் என்ற நிர்வாக நடைமுறைகளுக்கு எதிரான உத்தரவைப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மேலும், எதிர்ப்பை மீறி பள்ளிகள் நடத்தப்பட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணி சார்பில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

”பள்ளிக்கல்வித் துறையும் அ.தி.மு.க அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா?”- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

இதனையடுத்து, அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் அப்படி எதுவும் குறிப்பிடவில்லை எனக் கூறி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்வாங்கியிருந்தார்.

இந்நிலையில், “பிரதமர் உரை கேட்க மாணவர்கள் மாட்டுப் பொங்கலன்று பள்ளிக்கு வருமாறு உத்தரவிடவில்லை என, கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு, முதல்வரும், அமைச்சரும் தெரிவித்துள்ளனர். அப்படி எனில், மாணவர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என அறிவுரையாக கூட இன்றி, ஏன் செயல்முறை ஆணையாக நேற்று வெளியிட வேண்டும்?” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், “முதலமைச்சர், அமைச்சரின் பதிலைப் பார்த்தால் பள்ளிக்கல்வித்துறையும் அ.தி.மு.க அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே இவ்விவகாரத்தில் வெறும் மறுப்பையும், மழுப்பலையும் விட்டுவிட்டு முறையாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories