மு.க.ஸ்டாலின்

அருண் ஜெட்லியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு : மு.க.ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அருண் ஜெட்லியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு : மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உடல்நலக் குறைவால் காலமான பா.ஜ.கவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லியின் மறைவுக்கு தி.மு.க தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அருண் ஜெட்லி அவர்கள் திடீரென மறைவெய்திவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயக தீபத்தை போற்றிப் பாதுகாக்கும் “ஜெ.பி” என்று இன்றளவும் அழைக்கப்படும் 'மக்கள் தலைவர்' ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் போராட்டத்தில் முன்னணியில் நின்று கைதாகி - நெருக்கடி நிலை காலத்தில் ஏறக்குறைய 19 மாதங்கள் மிசா சிறைவாசத்தை அனுபவித்த அருண் ஜெட்லி அவர்கள் ஒரு ஜனநாயகவாதி மட்டுமல்ல - நாட்டிற்கு கிடைத்த மிகச்சிறந்த பாராளுமன்றவாதிகளில் ஒருவர்.

அருண் ஜெட்லியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு : மு.க.ஸ்டாலின் இரங்கல்!

செய்தி, வர்த்தகம், ராணுவம், சட்டம், நிதி உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளின் மத்திய அமைச்சராக மறைந்த திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோதும், பிறகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் அமைச்சரவையிலும் பணியாற்றி பராட்டுக்களைப் பெற்றவர்.

அனைத்து கட்சித் தலைவர்களுடனும் நட்புடன் பழகிய அருண் ஜெட்லி அவர்கள், மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், ஆளுங்கட்சியாக இருந்த நேரங்களில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை திரட்டுவதிலும் பெரும்பங்காற்றியவர். பாராளுமன்ற விவாதங்களில் தனித்திறமையுடனும், அறிவுக்கூர்மையுடனும் பதிலளிக்கும் ஆற்றல் பெற்றவர்.

அருண் ஜெட்லியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு : மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தலைவர் கலைஞர் அவர்கள் மீது பெருமதிப்பும் - மரியாதையும் வைத்திருந்த அருண் ஜெட்லி அவர்கள், மூத்த வழக்கறிஞராக உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடியவர் என்பது மட்டுமின்றி - நீதிபதிகளின் நன்மதிப்பைப் பெற்றவர். நீதித்துறை சீர்திருத்தங்களுக்காகப் பாடுபட்டவர்.

பன்முகத்திறமை கொண்ட பண்பாளரும், பாராளுமன்றவாதியுமான அவர், 66 வயதிலேயே மறைவெய்தியது பாரதிய ஜனதா கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய அமைச்சரவை சகாக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், சக வழக்கறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories