மு.க.ஸ்டாலின்

சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் தேர்தல் ஆணையமும், அ.தி.மு.க-வும்! - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

டெண்டர்களில் “கமிஷனை” ஒட்டுமொத்தமாக குத்தகை எடுக்கும் உள்நோக்கத்துடன் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதை திட்டமிட்டு தடுத்து வருகிறார்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் தேர்தல் ஆணையமும், அ.தி.மு.க-வும்! - மு.க.ஸ்டாலின் அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையமும், அ.தி.மு.க அரசும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறி கங்கணம் கட்டிக் கொண்டு கால அவகாசம் கேட்பது கண்டனத்துக்குரியது" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :

“மக்களவைத் தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்று “புதிய காரணங்களை”க் கண்டுபிடித்து, “தமிழகத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத சூழல் உள்ளது” என்று உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையமும், அ.தி.மு.க அரசும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறி கங்கணம் கட்டிக்கொண்டு பதில் மனுக்களைத் தாக்கல் செய்து- கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ளாட்சி ஜனநாயகத்தை அடியோடு பாழ்படுத்தி விட்டார்கள். அ.தி.மு.க அரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டு- முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்கு தமிழகத்தில் ஒரு தனி மாநில தேர்தல் ஆணையம் தேவையா என்ற முக்கியமான கேள்வியே எழுந்துள்ளது.

MK stalin statement - Page 1
MK stalin statement - Page 1

உள்ளாட்சித் தேர்தலை அ.தி.முக-வின் கட்சித் தேர்தல் போல் நடத்துவதற்கு 26.9.2016 அன்று மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், “31-12-2016க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும்” என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் அலட்சியம் காட்டிய ஆணைய அதிகாரிகள் மீது தி.மு.க. சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டு- அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு 18.9.2017-க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, 17.11.2017-க்குள் தேர்தலை நடத்தி முடித்திட வேண்டும் என்று மீண்டும் ஆணையிட்டது. அந்த உத்தரவையும் மாநில தேர்தல் ஆணையம் மதிக்கவில்லை.

பிறகு, “31.8.2018-க்குள் வார்டு வரையறைப் பணிகள் முடிந்து விடும். அதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்” என்று மாநில தேர்தல் ஆணையம் 2018 ஜூன் மாதத்தில் உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்தது. அதுவும் காற்றில் பறக்க விடப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 2019-ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, “மே 31 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்” என்று உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வாக்குறுதி அளித்தது மாநில தேர்தல் ஆணையம்.

ஆனால் இப்போது “மே 31” காலக்கெடு வருகின்ற நேரத்தில் “வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்” என்று புதிய காரணத்தைச் சொல்லி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் கோரியுள்ளது. அ.தி.மு.க அரசோ “இப்போதுள்ள சூழலில் தேர்தலை நடத்தவே முடியாது” என்று கை விரித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையமும், அ.தி.மு.க அரசும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறி பதில் மனுக்களைத் தாக்கல் செய்து ஒரு “சிறுபிள்ளைத்தனமான” விளையாட்டை நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது.

 MK stalin statement Page 2
MK stalin statement Page 2

சுதந்திரமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த நியமிக்கப்பட்டுள்ள மாநில தேர்தல் ஆணையரை அ.தி.மு.க அரசு தனது “பவர் ஏஜெண்ட்” போல் செயல்பட வைப்பது வெட்கக் கேடானது. மாநில தேர்தல் ஆணையருக்கு தேர்தலை நடத்துவதற்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டிய அரசு எவ்விதக் கூச்சமுமின்றி “கால அவகாசம்” கேட்டுக்கொண்டே இருப்பது தோல்வி பயத்தின் உச்சகட்டம். உயர்நீதிமன்ற நீதிபதி அந்தஸ்து கொடுத்து ஒரு மாநில தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டால், அவரை தனது அரசுக்கு எடுபிடியாகவே செயல்பட வைப்பேன் என்று முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி செயல்படுவது - மாநில தேர்தல் ஆணையர் பதவிக்குரிய கண்ணியத்தை சூறையாடும் கேடு கெட்ட செயல்.

அடிப்படை பிரச்னைகளை தீர்க்க மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல்- திடீர் பேரிடர்கள், வறட்சிகள் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்களைக் காப்பாற்ற உள்ளாட்சி நிர்வாகம் மிக முக்கியமானது. “தனி அதிகாரிகள்” உள்ளாட்சி நிர்வாகம் என்ற தோப்பாக நிச்சயம் மாறிவிட முடியாது. உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களை ஊழலுக்கு மட்டுமே பயன்படுத்திட முடியும். டெண்டர்களில் "கமிஷனை" ஒட்டுமொத்தமாக குத்தகை எடுக்கும் உள் நோக்கத்துடன் தான் உள்ளாட்சி துறை அமைச்சர் திரு எஸ் பி வேலுமணி தேர்தல் நடத்தப்படுவதை திட்டமிட்டு தடுத்து வருகிறார். ஆகவே உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் அதிமுக அரசு தொடர்ந்து நடத்தி வரும் “ஒத்துழையாமை இயக்கத்தை” மாநில தேர்தல் ஆணையர் தானாகவே முன் வந்து உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தெரிவித்து உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories