திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக திண்ணை பரப்புரை மேற்கொண்டார்.
தலைவர் மு.க.ஸ்டாலினின் முகம் காண, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்திரமப்பட்டு ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று முதியோர்கள், மகளிர் என அனைவரிடத்திலும் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஒட்டப்பிடாரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் சண்முகையா, தேர்தல் பொறுப்பாளர் கே.என்.நேரு மற்றும் மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆகியோர் வாக்கு சேகரிப்பின் போது உடன் இருந்தனர்.
அப்போது, திமுக தலைவரிடம் பொதுமக்கள் தாமாக வந்து தங்களது பகுதியில் உள்ள குறைகள் குறித்து எடுத்துரைத்தனர். அதற்கு செவிமடுத்த அவர், விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக ஆட்சிக்கட்டிலில் ஏறியதும் மக்களின் குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து, பெரியநாயகிபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது அதிமுகவைச் சேர்ந்த பெண் ஒருவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
அவர் பேசுகையில், “இதுவரை எந்த ஒரு அரசியல் தலைவரும் வருகை தராத குக்கிராமத்துக்கு நீங்கள் வந்து, மக்களின் குறைகளை கேட்டறிவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே, மக்களை நாடி வந்த திமுக தலைவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் பேசிய அந்த பெண்மணி, தங்களுடைய விவசாயத்தையும், விவசாய நிலங்களையும் காப்பாற்றினால் மட்டும் போதுமானது என கோரிக்கை விடுத்தார். ”