
நாம் அன்றாடம் உண்ணக்கூடிய உணவு பொருட்கள், உண்ண தகுதியானவையா என்பதை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய வாரியம் (FSSAI) அவ்வப்போது சரிபார்ப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து FSSAI பல்வேறு உணவு பொருட்களை தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் Everest மற்றும் Laljee Godhoo (LG) நிறுவனங்களின் பெருங்காயத்தில் இருக்க வேண்டிய ஆல்கஹால் கரையக்கூடிய சாற்றின் அளவு (Alcohol-soluble extract) குறைந்தபட்சம் 5% இருக்க வேண்டும். ஆனால், எவரெஸ்ட் மாதிரிகளில் இது வெறும் 3% மட்டுமே இருந்தது. மேலும் எல்ஜி (LG) நிறுவனத்தின் பெருங்காய மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான மாவுச்சத்து (Excessive starch) கலந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதைதொடர்ந்து செப்டம்பர் மாதம் 19 உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிக் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், காலாவதியான உணவுகள், பூச்சித் தொல்லை, உரிமக் குறைபாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து நடவ்டிக்கை எடுக்கப்பட்டது.
அதோடு அதே மாதம் டெல்லியில் 4,100 கிலோவுக்கும் அதிகமான சந்தேகத்திற்குரிய கோவா, பனீர் அழிக்கப்பட்டதோடு, மேவாட்டில் 10,000 கிலோவுக்கும் அதிகமான கலப்பட பனீர் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
தொடர்ந்து அக்டோபரில் (இந்த மாதம்) டெல்லி உணவுக் கிடங்குகளில் FSSAI நடத்திய சோதனையில், காலாவதியான உணவுப் பொருட்கள், பூச்சிகள், சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. 59 நெய் மாதிரிகளில் 19 பாதுகாப்பற்றவை எனத் தெரியவந்தது.
மேலும் மகாராஷ்டிரா – Reliance, Blinkit தொடர்புடைய நிறுவனங்களில், காலாவதியான உணவுப் பொருட்கள் மீண்டும் சந்தைக்குச் சென்றதாக எழுந்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், 5 நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே Everest நிறுவனத்தின் சீராக தூளில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்படம் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அதனை முழுமையாக திரும்பெறவும் FSSAI அந்நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சோதனையில், டோட்லா டெய்ரி (Dodla Dairy) நிறுவனத்தின் பாலில் டிடெர்ஜென்ட் (Detergent) மற்றும் காஸ்டிக் சோடா (Caustic Soda) கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் உயிர் ஆர்கானிக் (UEIR Organic Foods) நிறுவத்தின் மஞ்சள் நிற உலர் திராட்சை' (Yellow Raisins) மாதிரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சங்கள் (Pesticide Residues) இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே இந்த இரண்டு நிறுவனங்கள் மீதும் கடுமையான உணவுப் பாதுகாப்பு விதிமீறல்களுக்காக வழக்குப்பதிவு (Prosecution) செய்ய அனுமதி அளித்துள்ளது.
இந்த சூழலில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த SURYA FOOD & AGRO நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 'Priyagold' பிஸ்கட்களில், கால்நடைத் தீவனத்துக்கான தவிடு பயன்படுத்தப்பட்டதாகவும் சுகாதாரக் குறைபாடுகள் இருந்ததாகவும் கண்டறியப்பட்டு அதன் உரிமத்தை உரிமம் FSSAI ரத்து செய்துள்ளது.
இப்படியான சூழலில் தற்போது Priyagold பிஸ்கட்டுகளுக்கு நேபாள அரசு முழுமையாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது இதில் மனிதர்கள் உண்ண தகுதியற்ற, மாடுகளுக்கு வழங்கப்படும் தவிட்டுத் தீவனம் பிஸ்கட் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே நேபாள அரசு இப்படி ஒரு நடவடிக்கையை அதிரடியாக எடுத்துள்ளது.
எனவே இந்திய மக்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு இணையவாசிகள், சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். Priyagold நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் எந்த பிஸ்கட் வகைகளையும் யாரும் உண்ண வேண்டாம் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.






