
இன்றைய இணைய உலகில் அனைத்தும் நவீனமாக மாறி வருகிறது. சமூக ஊடகங்களை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் நடிப்பு, பேச்சு, நடனம், சாகசம் என தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இது சிலருக்கு உதவியாக இருக்கிறது. ஆனால் பலருக்கும் சோதனையாக அமைகிறது. சமூக ஊடகம் குறித்து விழிப்புணர்வு இல்லாமல், உடனே எப்படி வைரலாக வேண்டும் என்ற ஆசையுடளே பல இளைஞர்களும் மோசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அப்படிதான் உத்தர பிரதேசத்தில், இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக ஓடும் ரயிலில் பயணிகளுக்கு நடுவே குளித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் வீரன்கானா லட்சுமிபாய் ஜான்சி ரயில்வே நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ரயிலில், பிரமோத் என்ற இளைஞர் ஒருவர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுவதற்காக செய்த சம்பவம் பயணிகளை முகம் சுழிக்க வைத்தது. ரயில் பெட்டியின் கழிவறைக்கு வெளியே பயணிகள் நடந்து செல்லும் பாதையில், திடீரென வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து குளித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இணையத்தில் வைரலான வீடியோ அடிப்படையில், ரீல்ஸ் போட்ட பிரமோத் என்ற இளைஞரை கைது செய்த ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






