ஒன்றிய பா.ஜ.க அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து, வாக்காளர் பட்டியலில் மோசடிகளை அரங்கேற்றி வருவதாக கடந்த மாதம் எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து குற்றம்சாட்டி இருந்தார்.
அப்போது, ஒரே வாக்காளர் கர்நாடகா, மகாராஷ்ரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்களித்துள்ளார் என கூறிய ராகுல்காந்தி, 70 வயது மூதாட்டி ஒருவர் முதல்முறை வாக்களாராக பதிவு செய்திருப்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.
ஒரே படுக்கை அறைகொண்ட வீட்டின் முகவரியில், 60க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்றும், பல வாக்காளர்களின் முகவரிகள் இல்லை என்றும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டினார்.
தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில்தான் போலி வாக்காளர்களை அறிந்துள்ளதாகவும், இதுவரை தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்தும், அரசியல் சாசனத்துக்கு எதிரான குற்றம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் டெல்லியில் செய்தியாளர்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் சமூகத்தினரை குறிவைத்து வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதாகத் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் 6 ஆயிரத்து 18 வாக்காளர்கள் பெயரை நீக்கும்படி சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு தெரியாமலேயே சிலர் விண்ணப்பித்ததை ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.
இணையதள மென்பொருள் மூலமாகவும், கால் செண்டர் வாயிலாகவும் இதனை செய்துள்ளதாக தெரிவித்தார். கர்நாடகாவில் வாக்குகளை திருட பாஜக சதி செய்வதாகக் கூறிய ராகுல், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களை செய்தியாளர்கள் முன் நிறுத்தி ஆதாரங்களை வெளியிட்டார்.
வாக்குகளை திருடும் குற்றவாளிகள் யார் என்பது தேர்தல் ஆணையத்துக்கு தெரியும் என்றும், ஆனால் குற்றம் செய்தவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார் எனவும் ராகுல் குற்றம்சாட்டினார்.