இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு இன்று (ஆக.27) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 66 சதவீதம் பாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா உள்ளதால், இந்தியப் பொருட்கள் மீதான வரி 50 விழுக்காடாக உயர்த்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் அறிவித்தார்.
டிரம்பின் இந்த நடவடிக்கை முற்றிலும் நியாயமற்றவை என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது. இந்நிலையில், இந்த கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய கூடுதல் வரி உயர்வால், அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக, ஆயத்த ஆடைகள், அணிகலன்கள், தோல் பொருட்கள், கடல் சார் உணவுகள், வேதிப்பொருட்கள், தானியங்கி ஊர்திகள், இரும்பு, எஃகு உள்ளிட்ட முக்கியத் துறைகள் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும். இந்த வரி விதிப்பால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.4 விழுக்காடு வரை சரியக்கூடும் என உலகளாவிய வர்த்தக ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது
இதுதொடர்பாக உலகளாவிய வர்த்தக ஆய்வு நிறுவனம் வெளிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் 50 சதவீதம் வரிவிப்பால், ஜவுளி, ரத்தினங்கள், நகைகள், இறால், கம்பளங்கள் உள்ளிட்ட, சுமார் 6 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்றும், இது அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியில் 66 சதவீதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே வேளையில், அமெரிக்காவின் மருந்துத் தேவையில் பெரும்பங்கை வகிக்கும் இந்திய மருந்துப் பொருட்கள், குறைக்கடத்திகள், தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளுக்கு 50% வரியிலிருந்து இடைக்கால விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.