பிரதமர் மோடி போலி வாக்குகளின் ‘பூஸ்டர் டோஸ் மூலம் வெற்றி பெற்றதால், அவர் இருக்கும் இடத்தில் இருக்க தகுதியற்றவர் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், ஊடக துறைத் தலைவருமான பவன் கேரா விமர்சித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பவன் கேரா,"ஒன்றிய முன்னாள் அமைச்சர் அனுராக் தாக்கூர், எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதியில் வாக்கு முறைகேடு பெற்றுள்ளதாக கூறியுள்ளது, ஒரு வாரத்திற்கு முன்பு ராகுல்காந்தி கூறிய குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் சரிபார்த்துள்ளார் என்று கூறினார். அனுராக் தாக்கூரின் குற்றச்சாட்டு கடந்த பொதுத்தேர்தல் போலி வாக்குகளால் நடத்தப்பட்டது என்பதை நிரூபித்துள்ளதாகவும், எனவே போலி வாக்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலை ரத்துசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சி தலைவர்களின் 6 தொகுதிகளில் போலி வாக்குகள் இருப்பதாக தாக்கூர் தெரிவித்துள்ளதால், போலி வாக்காளர்கள் இருப்பதை வேண்டுமென்றோ அல்லது கவனக் குறைவாகவோ அவர் ஒப்புக்கொள்வதாக பவன் கேரா குறிப்பிட்டார். பிரதமர் மோடி, அவர் இருக்கும் இடத்தில், இருக்கத் தகுதியற்றவர் என்பது தங்களுக்குத் தெரியும். ஏனெனில் போலி வாக்குகளின் அடிப்படையில், அவர் 2024ல் வாரணாசி தொகுதியில் அரிதாகவே வெற்றி பெற முடிந்ததாக கேர கூறினார்.
ஒரு நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு சட்டமன்றத் தொகுதியில் போலி வாக்குகளை ஆய்வுசெய்து அடையாளம் காண காங்கிரஸ் கட்சிக்கு 6 மாதங்கள் எடுத்தாலும், 6 நாடாளுமன்றத் தொகுதிகளின் மின்னணுத் தரவை 6 நாட்களுக்குள் தாக்கூர் பெற முடிந்துள்ளது. இது, தேர்தல் ஆணையத்திற்கும், பாஜகவுக்கும் இடையிலான கூட்டுச் சதித்திட்டத்தை நிரூபித்துள்ளதாக பவன் கேரா குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடி மிகக் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வாரணாசிக்கான வாக்காளர் தரவுகளையும் தாக்கூர் வெளியிட்டிருக்க வேண்டும் என்று கூறிய பவன் கேரா, பிரதமர் மோடி போலி வாக்குகளின் 'பூஸ்டர் டோஸ்' பெறவில்லை என்றால், தேர்தலில் தோற்றிருப்பார் என்றும் கூறினார்.இது இனி எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மட்டுமல்ல, இப்போது அது ஒரு வெகுஜன இயக்கமாக மாறியுள்ளதாகவும் கூறினார்.