ஒன்றிய பா.ஜ.க அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து, வாக்காளர் பட்டியலில் மோசடிகளை அரங்கேற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, புள்ளிவிவர தரவுகளுடன் வாக்காளர் பட்டியல் மோசடிகள் குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, ஒரே வாக்காளர் கர்நாடகா, மகாராஷ்ரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்களித்துள்ளார் என கூறிய ராகுல்காந்தி, 70 வயது மூதாட்டி ஒருவர் முதல்முறை வாக்களாராக பதிவு செய்திருப்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.
ஒரே படுக்கை அறைகொண்ட வீட்டின் முகவரியில், 60க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்றும், பல வாக்காளர்களின் முகவரிகள் இல்லை என்றும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டினார்.
ஒரே தொகுதியில் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவித்த ராகுல்காந்தி, மகாராஷ்ராவில் நடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடி போலி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருப்பதாக புள்ளிவிவரம் வெளியிட்டார்.
உண்மையான வாக்காளர்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பறிப்பதாகவும் குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கினால், 30 விநாடிகளில், போலி வாக்காளர்களை கண்டுபிடித்து விடலாம் என்றும், ஆனால் பாஜக சார்புடைய தேர்தல் ஆணையம் அதை வழங்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில்தான் போலி வாக்காளர்களை அறிந்துள்ளதாகவும், இதுவரை தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்தும், அரசியல் சாசனத்துக்கு எதிரான குற்றம் என்றும், இனி தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்.
தேர்தல் முறைகேடு குற்றங்களுக்கு வாக்காளர் பட்டியலில் ஆதாரமாக உள்ளது. கிரிமினல் குற்றங்களை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. ஆளுங்கட்சிக்காக தேர்தல் ஆணையம் செய்த முறைகேட்டை கண்ணாடி போல் தெள்ளத் தெளிவாக துல்லியமான ஆதாரங்களுடன் கொடுத்துள்ளோம்.
ஒருகோடி போலி வாக்காளர்கள் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரான நான் பார்த்திருக்கிறேன், அதனால் கேட்கிறேன் ஆதாரங்களை ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்?. பாஜகவுக்காக தேர்தல் ஆணையம் அசுத்தம் செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.