இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், இன்றைய (ஆகஸ்ட் 4) நாள் நாடாளுமன்ற கூட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,
“தொடரும் நீட் தேர்வு முறைகேடுகள்! அநீதியை தடுக்காத ஒன்றிய அரசு” என மக்களவையில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி கண்டனம்!
நீட் நுழைவுத் தேர்வுக்கு மாநிலங்களில் இருக்கும் தீவிர எதிர்ப்பு குறித்தும் நீட் தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருவது குறித்தும் திமுக மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
வினாத்தாள் கசிவுகள் குறித்த குற்றச்சாட்டுகளைத் தீர்க்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
மருத்துவ நுழைவுத் தேர்வுகளை நடத்துவதில் மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்குவதில் அரசுக்கு இருக்கும் தடை என்ன? இன்னும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததன் காரணங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் PMMY திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. அ. மணி கேள்வி!
தமிழ்நாட்டில் குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தில் வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின் கீழ் உரிய நேரத்தில் கடன் வழங்குவதை உறுதி செய்ய ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என தர்மபுரி மக்களவை உறுப்பினர் அ. மணி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பயனாளிகள் PMMY கடன்களை நிலையான சுயதொழிலுக்கு திறம்பட பயன்படுத்த உதவும் வகையில் திறன் மேம்பாடு, நிதி கல்வியறிவு உள்ளிட்ட உதவிகளை வழங்க அரசின் திட்டங்கள் என்ன?
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில், குறிப்பாக தர்மபுரி தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான முத்ரா கடன்களைப் பெற்ற துறைகள் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் என்ன?
தர்மபுரி மற்றும் தமிழ்நாட்டின் பிற கிராமப்புறங்களில் உள்ள பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பெண் தொழில்முனைவோர் போன்ற விளிம்புநிலை சமூகங்களுக்கு PMMY கடன்களுக்கான சமமான அணுகுமுறையை உருவாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.