'ஆக்ஸிசம் -4' என்ற திட்டத்தின் கீழ் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய நான்கு பேர் கொண்ட குழு, 'டிராகன்'விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கிய பயணத்தை கடந்த 25ஆம் தேதி மதியம் வெற்றிகரமாகத் தொடங்கியது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட இந்த குழுவினர் 26 ஆம் தேதி மாலையில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றடைந்தார்கள். அதனைத் தொடர்ந்து 14 நாட்கள் அங்கு இவர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று அதே 'டிராகன்'விண்கலம் மூலம் இந்த 4 பேரும் இன்று நாடு திரும்பினர். இந்திய நேரப்படி இன்று பகல் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடல் பகுதியில் வெற்றிகரமான கடலில் இறக்கப்பட்டது.
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து கிளம்பிய டிராகன் விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியாக பாராசூட் மூலம் கடலில் பாதுகாப்பாக இறக்கப்பட்டது. தரையிறங்கிய டிராகன் விண்கலத்தை கப்பலில் ஏற்றி அமெரிக்க கடற்படை வீரர்கள் கரைக்கு கொண்டு சென்று, அதிலிருந்த விண்வெளி வீரர்களை ஒவ்வொருவராக வெளியே அழைத்து வந்தனர். விண்வெளி வீரர்கள் அனைவரும் நன்றாக இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.