இந்தியாவில் பொதுவாக மே மாதம் அதிகளவில் வெப்பம் ஏற்படும் மாதமாகும். ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டது. இது இந்தியாவில் இதற்கு முன்னர் நடந்திராத இயற்கை நிகழ்வாக அமைந்தது.
அதிலும் குறிப்பாக தென் மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை மஹாராஷ்டிரா, குஜராத், கேரளா உள்ளிட்ட இடங்களில் கடும் மழை பொழிவுக்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மே மாதத்தில் இந்தியாவில் இயல்பிற்கு அதிக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதோடு வானிலை நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளது.30 அதித கனமழை நிகழ்வுகள், 155 மிக கனமழை நிகழ்வுகள், 514 கனமழை நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதோடு வெவ்வேறு வானிலை நிகழ்வுகளால் நாடு முழுவதும் மே மாதத்தில் மட்டும் 260 பேர் உயிரிழந்தனர் என்றும், குறிப்பாக இடி,மின்னல் தாக்கி 199 பேரும், கனமழை மற்றும் வெள்ள பெருக்கில் 58 பேரும், சூறைக்காற்றில் 3 பேர் என 260 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.