வக்ஃப் திருத்த சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ராஜீவ் தவான், அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
வக்ஃப் வாரிய உறுப்பினர்களாக இதுவரை இஸ்லாமியர்களே இருந்து வரும் நிலையில், பிறமதத்தினரை இணைப்பது முறையற்றது என வழக்கறிஞர் கபில்சிபல் தெரிவித்தார். மாநில அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக உள்ள மாவட்ட ஆட்சியர்கள் வக்ஃப் சொத்துக்கள் மீது முடிவு செய்வதை எப்படி நீதித்துறையின் முடிவாக இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள்தான் வக்ஃப் வாரியத்திற்கு நன்கொடை வழங்க முடியும் என்ற விதி தனிமனித உரிமைகளுக்கு எதிரானது என வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். வக்ஃப் திருத்த சட்டங்கள் அரசியல் சாசனம் வழங்கி உள்ள உரிமைகள் மீதான தாக்குதல் என வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் வாதிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் சார்பில் ஆஜராகி வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வக்ஃப் திருத்த சட்டங்கள் எந்த தனமனித உரிமைகளையும் மீறிவில்லை எனக் கூறினார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், வக்ஃப் சொத்தை மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வது நியாயமானதா என கேள்வி எழுப்பினர். வக்ஃப் சொத்தை ஒருவர் பதிவு செய்ய வரும்போது அது அரசு நிலம் என்று அரசு கூறினால் என்ன நடக்கும்? என வினவிய நீதிபதிகள், ஒன்றிய அரசின் சார்பில் அளிக்கப்பட்ட பதில்களின் திருப்தி இல்லை எனத் தெரிவித்தனர்.
100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் மீது இப்போது முடிவு செய்ய முடியுமா? என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வரலாற்றை மீண்டும் மாற்றி எழுத முடியாது என்றும் தெரிவித்தனர். இந்து அறநிலையத்துறை சட்டத்தின் படி இந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும் போது, வக்ஃப் சட்டத்தில் மட்டும் ஏன் பிற மதத்தினரை சேர்க்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். பின்னர் இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை பிற்பகல் தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.