கடந்த ஜனவரி மாதம் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மகா கும்ப மேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கும்ப மேளாவில் உலகம் முழுவதும் இருந்து பலரும் கலந்துகொள்வர். இந்த சூழலில் இந்த கும்ப மேளாவிற்கு ஒன்றிய மற்றும் அம்மாநில பாஜக அரசு சரியான பாதுகாப்பு முறைகளை ஏற்பாடு செய்யவில்லை.
அதன் எதிரொலியாக இந்த கூட்டத்தில் நசுங்கி இதுவரை குறைந்தது 50 பேராவது உயிரிழந்திருப்பர். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிக்கட்சிகள் வலியுறுத்திய நிலையிலும், வழக்கம்போல் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதே போல் அண்மையில் டெல்லி இரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் குறித்து ஒன்றிய பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வரும் நிலையில், நாடு முழுவதும் பாஜகவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. மேலும் கும்ப மேளாவுக்கு அதிகளவில் கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும், ஒன்றிய அரசு கூடுதல் இரயிலை இயக்காமல் விட்டுள்ளது, ஒன்றிய பாஜக அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் போட்டிக்காக வாரணாசி சென்ற நிலையில், அவர்கள் திரும்பி வருவதற்கு முன்பதிவு செய்த இரயில் பெட்டியில் வட மாநிலத்தவர்கள் ஏறி அட்டூழியம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த 7 வீரர்கள் பங்கேற்க சென்றனர். இந்த சூழலில் இன்று அவர்கள் தமிழ்நாடு திரும்புவதற்காக இரயிலில் ஏசி பெட்டியில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வட மாநிலத்தவர்கள் வழக்கம்போல் அந்த பெட்டியில் ஏறிக்கொண்டு, வழிவிடாமல் அட்டூழியம் செய்துள்ளனர்.
இதனையடுத்து இதுகுறித்து வீடியோ வெளியானதோடு, இது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவனத்துக்கு சில நிமிடங்களிலேயே கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து வாரணாசியில் சிக்கி தவிக்கும் மாற்றுத்திறனாளி வீரர்களை பாதுகாப்பாக விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு அழைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில் மாற்றுத்திறனாளி வீரர்கள் 7 பேருக்கும் மதியம் 1.30 மணிக்கு வாரணாசியில் இருந்து பெங்களூருவுக்கு டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து மாலை 7.30 மணிக்கு சென்னைக்கு விமான டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வீரர்களிடம் பேசி 30 நிமிடத்தில் தீர்வு கண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் வீரர்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.