கர்நாடகா மாநிலம், மொளகாலமுரு தாலுகாவுக்கு உட்பட்ட பகடலபண்டே என்ற கிராமத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆதர்ஷ் என்ற 23 வயது இளைஞர் பங்கேற்றுள்ளார்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்வில் DJ இசைக்கு ஆதர்ஷ் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் சுருண்டு கீழே விழுந்துள்ளார். பிறகு அங்கிருந்தவர்கள் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைகேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் நடனமாடும் போது மாரடைப்பால் உயிரிழப்பு ஏற்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.