இந்தியா

ஆதாரங்களை புறந்தள்ளி, அடக்குமுறைகளை நிலைநாட்டும் ஒன்றிய பா.ஜ.க அரசு!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு எதிராக எவ்வித தகுந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும், கைது செய்யப்பட்டு திகார் சிறையில் வைக்கப்பட்டது, பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியலுக்கு புதிதல்ல.

ஆதாரங்களை புறந்தள்ளி, அடக்குமுறைகளை நிலைநாட்டும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பா.ஜ.க.வில் இணைந்து குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்படும் பலர், உண்மையில் குற்றவாளிகளாக இருப்பது போல், பா.ஜ.க.விற்கு எதிர்குரல் எழுப்பும் பலர் குற்றவாளிகளாக இல்லாத நிலையிலும் கைது செய்யப்படுவது, கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

அவ்வகையில், கடந்த 2014 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிப்பிடியில் ஏறியதிலிருந்து, ஊழல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட பல அரசியல் தலைவர்களை, பா.ஜ.க தனது கைக்குள் போட்டுக்கொண்டு தனக்காக பயன்படுத்தி வருகிறது.

அதே நிலையில், பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியலுக்கு செவி சாய்க்காத பல நேர்மையாளர்களையும், தவறாமல் கைது செய்தும் வருகிறது.

அவ்வரிசையில், அண்மையில் கைது செய்யப்பட்டவரே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அவர்மீது சுமத்தப்பட்ட மதுபானக் கொள்கை வழக்கில், அவருக்கு எதிரான ஆதாரங்கள் எவையும் சிக்காத நிலையிலும், அவர் ரூ. 100 கோடி ஊழல் செய்ததாக தெரிவித்து, அந்த ரூ. 100 கோடி குறித்த தகவல் எதுவும் வெளிவராத நிலையிலும், கைது செய்யப்பட்டுள்ளார்.

இது அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கை, கடும் கண்டனத்திற்கு உண்டானது என்றாலும், அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க குறிவைத்த முதல் ஆள் இல்லை என்பது தான், ஆய்வுக்குரிய செய்தியாக மாறியுள்ளது.

சுமார் 6 மாதங்களுக்கு முன்பே, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சி MP சஞ்சய் சிங், 6 மாத சிறை தண்டனைக்கு பின், அவர் மீது சுமத்தப்பட்ட வழக்கில் தகுந்த ஆதாரங்கள் இல்லை என தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதும், பா.ஜ.க.வின் அடக்குமுறை நடவடிக்கைக்கு மற்றொரு உதாரணம்.

இதுவரை ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் போன்ற பல துறை சார்ந்த முற்போக்கு சிந்தனை கொண்டவர்களை கொண்டு, சிறைகளை நிரப்பி வந்த பா.ஜ.க, தற்போது அதிகாரப்பிடியின் உச்சத்தில் அரசியல் தலைவர்களையும் குறிவைத்து வருகிறது.

இது குறித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “ஏதோ 4 பேர் எனக்கெதிராக சாட்சி கூறினார்கள் என்று தக்க சான்றுகள் இல்லாத நிலையிலும், என்னை கைது செய்துள்ளனர். இது போன்று, நானும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது குற்றம்சாட்டினால், அவர்களும் கைது செய்யப்படுவார்களா?” என நீதிமன்ற விசாரணையின் போது எழுப்பிய கேள்விக்கு, சில மணித்துளிகள் அமைதியே விடையாக கிடைத்தது.

அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து, அடக்குமுறைக்கு ஆளாகிற அனைத்து எதிர்கட்சி தலைவர்களும், பா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்கு ஒரு போதும் அஞ்ச மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனினும், ஆட்சியாளர்கள் தொடர்போ, வழக்குப் பிரிவுகள் பற்றிய தெளிவோ, சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள தேவையான வலிமையோ, தற்காத்துகொள்ள நிதியோ இல்லாத, சராசரி மக்கள், பா.ஜ.க.வின் அடக்குமுறைகளுக்கு பயப்பட தான் வேண்டியுள்ளது.

ஆதாரங்களை புறந்தள்ளி, அடக்குமுறைகளை நிலைநாட்டும் ஒன்றிய பா.ஜ.க அரசு!

அவ்வாறு, கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் அத்னான் மன்சூரி என்பவர், இந்து சமய ஊர்வலத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கையில், ஊர்வலத்தை நோக்கி எச்சில் துப்பினார் என்று குரல் எழுப்பப்பட்ட ஒரே காரணத்திற்காக, எவ்வித ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டார். அவரது வீடும் தரைமட்டமாக்கப்பட்டது.

ஆனால், அந்த இளைஞர் சிறை தண்டனைக்கு ஆளாகி 5 மாதங்கள் கழித்து, வழக்கு கொடுத்தவர், “இது அந்த இளைஞர் அல்ல. இவர் யாரென்று எனக்கு தெரியாது” என தெரிவித்தது கடும் சர்ச்சையானது.

எனினும், அத்னான் அவர்களுக்கு இழப்பீடு கூட கிடைக்கப்படவில்லை. ஏமாற்றமே கிடைத்தது. இது குறித்து கைது செய்யப்பட்ட அத்னானின் தந்தை, “நடந்த நிகழ்வை பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு ஒன்றும் வேண்டாம். என் மகன் திரும்ப வந்ததே போதுமானது. எப்படியாவது வாழ்க்கையை நடத்திக்கொள்கிறோம்” என தெரிவித்தார்.

இவ்வாறு தான், மக்களின் மனநிலையை மாற்றியுள்ளது பா.ஜ.க.வின் கொடூர நடவடிக்கைகள். இது போன்ற ஆதாரமின்றி கைது செய்வதும், அடக்குமுறை ஆட்சி நடத்துவதும், உலக நாடுகளிடையே இந்திய மக்களாட்சிக்கு அவப்பெயரை தேடித்தந்துள்ளது.

banner

Related Stories

Related Stories