பான் - ஆதார் இணைக்காத்தவர்களிடம் இருந்து கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை வசூலிக்கப்பட்ட அபராதம் மூலம், அரசுக்கு ரூ.601.97 கோடி கிடைத்துள்ளதாக ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் தகவல்.
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தனிமனித அடையாளம் என கூறி ஆதாரை கொண்டுவந்து, அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கியது. அந்த வகையில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என ஓன்றிய அரசு அறிக்கை வெளியிட்டது. ஓன்றிய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசத்தை ஒன்றிய அரசு நீட்டித்தது.
புதிய பான் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு, விண்ணப்பத்தின் போது ஆதார்-பான் இணைப்பு தானாகவே செய்யப்படுகிறது. ஆனால் 2017-ம் ஆண்டோ அல்லது அதற்கு முன்போ PAN ஒதுக்கப்பட்ட, ஏற்கனவே PAN வைத்திருப்பவர்களுக்கு, PAN மற்றும் ஆதாரை இணைப்பது கட்டாயம். எனவே பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து, பொதுமக்களின் நலன் கருதி ஒன்றிய அரசு கால அவகசாத்தை நீட்டித்தது.
தொடர்ந்து கால அவகாசம் நீட்டித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் இதற்கான கெடு நிறைவடைந்தது. இந்த சூழலில் ஆதாருடன் பான் கார்டுகள் இணைக்கப்படாதவர்களிடம் இருந்து இதுவரை வசூலிக்கப்பட்ட அபராதம் மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.601 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஒன்றிய இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்தரி, நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், “கடந்த 2023 ஜூன் 30-ம் தேதிக்குப் பிறகு பான்-ஆதார் இணைப்பவர்களுக்கு தாமதக் கட்டணம் ரூ.1,000 விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் கடந்த ஜன. 31-ம் தேதி வரை ரூ.601.97 கோடி தாமதக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 11.48 கோடி பான் கார்டுகள் இன்னும் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் ஆதார் - பான் எண்கள் இணைப்பு குறித்த விவரங்களை கேட்டு தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் பான் கார்டுகளை ஆதாருடன் இணைக்காத 11.5 கோடி பேரின் பான் கார்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் புதிய பான் கார்டைப் பெறுவதற்கு GST-யை தவிர்த்து ரூ.91 மட்டுமே ஆகும். ஆனால் பான் கார்டை மீண்டும் செயல்படுத்துவதற்கு எப்படி 10 மடங்கு அபராதத்தை அரசு விதிக்க முடியும்?. அதுமட்டுமின்றி பான் கார்டு செயலிழக்கச் செய்யப்பட்டவர்கள் எப்படி வருமான வரி தாக்கல் செய்வார்கள்?. எனவே அரசு பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கால வரம்புகளை மறுபரிசீலனை செய்து நீட்டிக்க வேண்டும் என்று RTI தாக்கல் செய்த சமூக ஆர்வலர் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.