புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் பாலாஜி என்ற நபர் வசித்து வருகிறார். பொதுப்பணித்துறையில் வேலை செய்து வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையை சேர்ந்த நபர் ஒருவருக்கு ரூ.5 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை பாலாஜி திருப்பி கெட்டபோதும் அவர் கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த பாலாஜி அந்த நபர் மீது புதுச்சேரி, உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்.ஐ சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். அப்போது அந்த எஸ்.ஐ-க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தினால் அந்த எஸ்.ஐ இவரிடம் ரூ.30 ஆயிரம் கடன் கேட்டுள்ளார்.
மேலும், தனக்கு இரிடியம் வியாபாரம் செய்யும் கும்பலோடு பழக்கம் இருப்பதாகவும், இந்த பணத்தை உடனடியாக திருப்பி கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய பாலாஜியும் அந்த எஸ்.ஐ-யிடம் அவர் கேட்ட ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.
ஆனால் கொடுத்த பணம் திரும்ப வரவில்லை. இதனால் பாலாஜி அவரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அப்போது புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றதால் எஸ்.ஐ-யால் போனை எடுக்கமுடியவில்லை. இதனால் பாலாஜி நேரில் சந்தித்து தனது பணத்தை கேட்டுள்ளார்.
ஆனால் தற்போது வரை எஸ்.ஐ சந்திரசேகர் பணத்தை கொடுப்பதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பாலாஜி, பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்த எஸ்.ஐ மீது டி.ஜி.பி-யிடம் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் குற்றம்சாட்டப்பட்ட எஸ்.ஐ சந்திர சேகர் புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.