டெல்லியில் கீதா காலனி அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தின் அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் பைகளில் மனித உடல் இருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவர்கள் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த போலிஸார் சடலத்தை ஆய்வு செய்தனர். இதில் துண்டு துண்டாக வெட்டப்பட்டது பெண்ணின் உடல் என்பதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து பிளாஸ்டிக் பைகளில் இருந்த உடல் பாகங்களை போலிஸார் கைப்பற்றி தடவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பெண்ணை கொலை செய்து அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைக்குள் அடைந்து பாலத்தில் வீசி இருக்கலாம் என போலிஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது குறித்தும் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலர் 35 துண்டுகளாக வெட்டி கொலை உடல் பாகங்களைப் பல இடங்களில் வீசிய சம்பவம் நடந்தது. தற்போது அதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது டெல்லி மக்களைப் பீதியடைய வைத்துள்ளது.