
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்திற்குட்பட்ட ரகோபூர் தியாராவைச் சேர்ந்தவர் அங்கித் குமார். 14 வயது சிறுவனான இவருக்கு குடும்பத்தினர் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து புதிய மோட்டார் சைக்கிளைப் பூஜை செய்வதற்காகக் கங்கை ஆற்றுக்கு அங்கித் குமார் மற்றும் குடும்பத்தினர் சென்றுள்ளனர். அங்கு கங்கை ஆற்றில் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, முதலை ஒன்று குளித்துக் கொண்டிருந்த சிறுவன் அங்கித் குமாரைக் கடித்து தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுவனை மீட்க முயற்சி செய்தனர்.ஆனால், சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாகத்தான் மீட்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆற்றில் இறங்கி முதலையைப் பிடித்து வெளியே இழுத்து வந்துள்ளனர். பின்னர் குச்சிகள் மற்றும் தடிகளால் இரக்கமின்றி தாக்கியுள்ளனர். முதலை இறந்த பிறகே தங்களது தாக்குதலை நிறுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








