இந்தியா

“கல்வி, சுகாதாரம், உணவு..” இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாடு - பொருளியலாளர் ஜெயதி கோஷ் !

இந்தியாவில் இன்னும் நாம் நம்பிக்கையுடன் வாழ முடியும் என்பதைத் தமிழ்நாடும் கேரளமும் நினைவூட்டுவதாக பொருளியலாளர் ஜெயதி கோஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.

“கல்வி, சுகாதாரம், உணவு..” இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாடு - பொருளியலாளர் ஜெயதி கோஷ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சமகால இந்தியாவின் முதன்மைப் பொருளியலாளர்களில் ஒருவர், ஜெயதிகோஷ். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் [ஜேஎன்யு] 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொருளியல் கற்பித்துவந்த ஜெயதி, தற்போது அமெரிக்காவின் மாஸசூஸெட்ஸ் அம்ஹெர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சர்வதேசப் பொருளியல், வளர்ந்துவரும் நாடுகளில் வேலைவாய்ப்புகள், பேரியல் பொருளாதாரக் கொள்கை [Macroeconomic policy], பாலினம், வளர்ச்சி எனப் பல தளங்களில் இயங்கிவரும் ஜெயதி, அவற்றைப் பற்றித் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

ஐநா அவையின் பொதுச் செயலாளர் அமைத்த 'பயனுறு பன்முகச்சார்பியம் குறித்த உயர்நிலை ஆலோசனைக் குழு'வின் (High-Level Advisory Board on Effective Multilateralism) உறுப்பினர்களில் ஒருவரான ஜெயதி, 'Our Common Agenda' என்கிற எதிர்காலத்துக்கான செயல்திட்டத்தை உருவாக்குவதில் பங்கெடுத்துள்ளார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றுவரும் 'TN Talks' மாதாந்திரச் சொற்பொழிவுக்காகச் சென்னை வந்திருந்த ஜெயதியுடனான உரையாடலிலிருந்து:

“கல்வி, சுகாதாரம், உணவு..” இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாடு - பொருளியலாளர் ஜெயதி கோஷ் !

=> 21ஆம் நூற்றாண்டின் பொருளியல் என்ன? இக்கால கட்டத்தில் பொருளியலாளராக இருப்பதன் முக்கியத்துவம் (அல்லது ஒருவகையில் சவால்) என்ன?

17,18 ஆம் நூற்றாண்டுகளில், ஏன் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில்கூட, பொருளியலாளர்கள் எனப்பட்டவர்கள் மானுட நிலையை (Human Condition] எப்படி மேம்படுத்தலாம் என்பதில் உண்மையான அக்கறை கொண்டிருந்தனர். ஆனால், இன்றைய பொருளியலாளர்களின் அக்கறையோ பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலேயே உள்ளது; அதற்கு மனிதகுலம் எப்படிப் பங்களிக்க முடியும் என்பதற்கான வழிகளையும் அவர்கள் தேடுகிறார்கள். மனிதகுலத்தை மேம்படுத்துவதற்காகப் பொருளியலைப் படித்த காலம் போய், இப்போது பொருளாதாரத்தை மேம்படுத்த மனிதகுலம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராயும் இடத்துக்குப் பொருளியலாளர்கள் வந்துவிட்டார்கள்.

இந்தப் பின்னணியில் அதீத வறுமை, அசாத்தியமான ஏற்றத்தாழ்வு குறைந்துவிட்ட வேலைவாய்ப்பு, அங்கீகரிக்கப் படாத பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பு, காலநிலை மாற்றம் போன்றவை நாம் எதிர்கொண்டிருக்கும் முதன்மைப் பிரச்சினைகள். ஆனால், இவற்றைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தியை [ஜிடிபி] எப்படி உயர்த்தலாம் என்பதில் மட்டுமே முக்கியப் பொருளியலாளர்கள் கவனம் கொண்டுள்ளனர். ஆக, இக்காலகட்டத்தில் பொருளியலாளராக இருப்பதன் மிகப்பெரிய சவால் என்பது, அந்த முக்கியப் பொருளியலாளர்களுடன் போராடி இப்பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதே; ஜிடிபியைத் தாண்டி பொருளியல் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதும் ஒரு சவால்மிக்க பணிதான்.

“கல்வி, சுகாதாரம், உணவு..” இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாடு - பொருளியலாளர் ஜெயதி கோஷ் !

=> உலகப் பொருளாதாரத்தின் பின்னணியில் இன்றைய இந்தியப் பொருளாதாரத்தை எப்படி வரையறுப்பீர்கள்? இந்தியா வளர்ந்த நாடாக மாறிவிட்டதா?

இந்தியா இன்னும் வளர்ந்துவரும் நாடுதான். உலகளவில் அதீத வறுமையிலும் கொடும் பசியிலும் உள்ள மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். ஒரு குடியரசு நாடாக மாறி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், இவ்வளவு பேர் வறுமையிலும் பசியிலும் வாடுவதன் மீது கவனம் குவிக்கத் தவறிவிட்டோம்; ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படைத் தேவை உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதுதான் முதன்மைப் பணியாக இருந்திருக்க வேண்டும், இல்லையா? அது இனிமேலும் முதன்மையான இலக்கு இல்லை என்பதை நாம் வசதியாக மறந்துவிட்டிருக்கிறோம்.

மற்றொருபுறம், இந்தியப் பொருளாதாரம் மிகப் பெரிய ஆற்றலைக் கொண்டிருக்கிறது; அந்த ஆற்றலின் மூலம் மிக முக்கியமான பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறி வருகிறது. ஆனால், அதன் உள்கூடு எளிதில் நொறுங்கிவிடக் கூடியதாக இருக்கிறது. ஜிடிபியின் 90% பங்கு, நாட்டின் 10% மேல்தட்டு மக்களுக்குச் செல்கிறது; கீழ்த்தட்டில் இருக்கும் பெரும்பான்மை மக்களுக்குப் பாதுகாப்பின்மையும் பிரச்சினைகளும் மட்டுமே அதிகரிக்கின்றன. உலகப் பொருளாதாரத்தின் பின்னணியில் இந்தியப் பொருளாதாரம் இன்று ஒரு யானையைப் போல் நிற்கிறது; ஆனால், அந்த யானையோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

“கல்வி, சுகாதாரம், உணவு..” இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாடு - பொருளியலாளர் ஜெயதி கோஷ் !

=> பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு அங்கீகரிப்படாத நிலை குறித்து நீங்கள் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறீர்கள்; இந்தியாவில் இன்று பெண்களின் நிலை எப்படி இருக்கிறது?

பெண்கள் முன்னேறுவதற்கு முதல் தேவை: பண்பாட்டு மாற்றம். அந்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அதிகாரமுள்ள பதவிகளில் பெண்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. வீட்டில் பெண்கள் ஊதியமற்ற தொழிலாளர்களாகவே உள்ளனர்; அடிப்படைப் பணிகளில் அவர்களின் வேலையும் பங்களிப்பும் அங்கீகரிக்கப் படுவதில்லை. பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த எத்தகைய பங்களிப்பை அளிக்கிறோம் என்பதை ஊதியமற்ற பெண் தொழிலாளர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. அவர்கள் தங்களைக் குறைத்து மதிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

ஆனால், சமூகமோ குறைத்து மதிப்பிடுவதையும் தாண்டி, அவர்களைச் சுரண்டவும் செய்கிறது. சந்தை மட்டுமல்ல, அரசாங்கங்களும் பெண்களின் ஊதியமற்ற உழைப்பைச் சுரண்டுகின்றன. மேலும், பணியாற்றும் பெண்களுக்குக் குறைந்த ஊதியத்தையே அவை உறுதிப்படுத்துகின்றன. பெண்கள் எல்லா வேலைகளையும் ஊதியமில்லாமல் இலவசமாகவே செய்துவருவதாகவும் செய்யவேண்டுமெனவும் அவை நினைக்கின்றன. இந்த மனநிலை நீடிக்கும்வரை பெண்களின் உழைப்பை நாம் அங்கீகரிக்க மாட்டோம்; அவர்கள் சுரண்டப்படுவதும் தொடரவே செய்யும்.

“கல்வி, சுகாதாரம், உணவு..” இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாடு - பொருளியலாளர் ஜெயதி கோஷ் !

=> தமிழ்நாட்டைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

தென் இந்தியாவுக்கு வந்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன்; இந்தியாவில் இன்னும் நாம் நம்பிக்கையுடன் வாழ முடியும் என்பதைத் தமிழ்நாடும் கேரளமும் நினைவூட்டுகின்றன. அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போன்ற ஒரு பொது நூலகம் இருப்பது மிகவும் அற்புதமானது; அதைப் பார்வையிட்டபோது எவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்தேன் என்று உங்களால் கற்பனை செய்ய முடியாது. எல்லா வசதிகளுடனும் கூடிய எல்லோருக்குமான இப்படி ஒரு நூலகமும் மாநிலம் முழுக்க 4,500 பொது நூலகங்களும் ஒரு நாகரிக சமூகத்துக்கான சிறந்த அடையாளங்கள். தமிழ்நாட்டின் ஆரம்ப சுகாதார நிலையங்களைப் போல் வட மாநிலங்களில் பார்த்துவிடவே முடியாது.

அரசாங்கம் நன்றாகச் செயல்படுவதை மக்கள் உறுதிப்படுத்துகிறார்கள். இது சமூக இயக்கங்களின் விளைவு என நான் கருதுகிறேன். ஏழைகளுக்கு இலவச உணவு, குடிநீர், மின்சாரம், கல்வி போன்ற இலவசத் திட்டங்கள் பெரும்பான்மை மக்களின் சமூகப் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்துகின்றன. அவை இலவசங்களல்ல; மனிதர்களின் அடிப்படை உரிமைகள். தமிழ்நாட்டிலும் பிரச்சினைகள் உண்டு; எனினும் பிற மாநிலங்களைக் காட்டிலும் மேம்பட்டுள்ள தமிழ்நாட்டிடம், இந்தியா கற்றுக்கொள்ள நிறையவே உள்ளன.

“கல்வி, சுகாதாரம், உணவு..” இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாடு - பொருளியலாளர் ஜெயதி கோஷ் !

=> ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' வெளியான 175ஆம் ஆண்டு இது. நீங்கள் முதன்முறையாக அதை வாசித்த அனுபவத்தை நினைவுகூர முடியுமா? செயற்கை நுண்ணறிவின் (AI) அசாதாரணமான எழுச்சியும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பலவற்றில் அது தாக்கமும் செலுத்திவரும் தற்போதைய காலகட்டத்தில், அந்த 'அறிக்கை'யின் பொருத்தப்பாடு என்ன?"

நான் மிக இளவயதில் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முறையாக வாசித்தேன்: மாணவப் பருவத்தின் அந்தக் காலகட்டத்தில் நாங்கள் மிகுந்த தீவிரத்துடன் இருந்தோம்; இதோ புரட்சி வந்துவிட்டது, அது மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும் என எல்லாரும் நம்பினோம். எனவே, அது மிகவும் ஊக்கமளிக்கும் ஆவணமாக இருந்தது. குறிப்பாக, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் ஒன்றுகூடுவதற்கான சாத்தியத்தை அது அங்கீகரித்தது உண்மையில் பெரிய விஷயமாகத் தோன்றியது. அந்த அடிப்படைப் பொதுநலன் இப்போதும் நிலவவே செய்கிறது. வேலைக்குச் செல்பவர்கள், வேலை செய்பவர்கள் என அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், வேலை செய்யும் அனைவரும் - முறையாக அங்கீகரிக்கப்படாத, முறையான ஊதியம் பெறாத அனைவருமே - தொழிலாளர்கள்தான் என்பதை வளர்ந்த பிறகே நான் உணர்ந்தேன்.

“கல்வி, சுகாதாரம், உணவு..” இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாடு - பொருளியலாளர் ஜெயதி கோஷ் !

மிகச் சமீபத்தில் ‘அறிக்கை'யை மீண்டும் வாசித்தபோது, திகைத்துப் போனேன். முழுமையாக இல்லையென்றாலும், உற்பத்திச் செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் சார்ந்து கூர்மையாகப் பல இடங்களில் அதுகூறியிருப்பது இன்றைக்கும் பொருந்துகிறது. மார்க்ஸ்–எங்கெல்ஸ் காலத்தில் உருவாகியிருக்காத உலகமயமாக்கலின் பிரச்சினைகளைப் பற்றி 'அறிக்கை’ பேசுகிறது. ஒரு பண்பாட்டுக் கூறு இன்றைக்கு உலகம் முழுவதும் சென்றுவிடுகிறது.

ஃபிரெண்ட்ஸ்' என்கிற அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரை இணையத்தில் பார்த்து சீன மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார்கள்; இந்தியர்களோ கொரியப் பாடல்களைக் கொண்டாடித் திளைக்கிறார்கள். எல்லாமே சர்வதேசமயமாகிவிடுகிறது. ஒரு பண்பாடு, உலகம் முழுவதும் செல்வதற்கான சாத்தியங்களைக் கொண்டிருப்பதையும், நாம் என்ன உருவாக்குகிறோம், எப்படி உருவாக்குகிறோம் என்பதை அது தீர்மானிப்பதையும் அந்த அறிக்கை எப்படிக் கற்பனை செய்துபார்த்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, அது இன்றைக்கும் பொருத்தப்பாடு உடையதாகிறது என்பதே இதிலிருந்து கிடைக்கும் செய்தி

- நன்றி 'இந்து தமிழ் திசை'

Related Stories

Related Stories