கேரளா மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள மல்லப்பள்ளியைச் சேர்ந்த மரியம்மா எனபவர் தனது 95-வது வயதில் உயிரிழந்தார். அவருக்கு பல பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் இருக்கும் நிலையில், மாரியம்மா இறந்தபின்னர் அவரின் வீட்டுக்கு வந்து மகிழ்ச்சியோடு புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தை பார்த்த பலர் வீட்டில் பெரியவர் ஒருவர் இறந்ததாக இப்படியா சிரித்துக்கொண்டு இருப்பார்கள். இது பண்பாடுக்கு எதிரானது என கருத்து கூறி வந்தனர். மேலும், ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது..
இந்த நிலையில், இறந்த மரியம்மாவின் உறவினரான பாபு உம்மன் என்பவர் இதற்கு விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "மரியம்மா தன் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளை மிகவும் நேசித்தார் .அவர் கடந்த ஒருவருடமான உடல்நல குறைவால் படுத்த படுக்கையாக இருந்தார். அவளுடைய மரணத்தைத் தொடர்ந்து, அவளுடன் கழித்த நாட்களை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்வதே எங்கள் நோக்கம்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்தபின்னர் பிரார்த்தனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்தே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. அவரை மகிழ்ச்சியாக வழியனுப்ப வேண்டும் என்ற காரணத்தால் இந்த புகைப்படத்தை எடுத்தோம். அதன் பின்னர் வாட்ஸ்அப் மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கு இது அனுப்பப்பட்டது. அப்போதுதான் இது வெளியாகியுள்ளது" என்று கூறியுள்ளார்.
மரியம்மாவின் கணவர் CSI தேவாலயத்தில் பாதிரியாராக இருந்துள்ளார். மாரியம்மாவின் இந்த பெரிய குடும்பத்தில் இரண்டு பிஷப்புகளும் இரண்டு பாதிரியார்களும் உள்ளனர். இந்த புகைப்படத்தை கேரள அமைச்சர் சிவன்குட்டியும் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து குடும்பத்தாரை பாராட்டியுள்ளார்.