இந்தியா

பெங்களூரு சிறையில் சொகுசு வசதிகள் - சசிகலாவின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரூபா IPS மீதான வழக்கு ரத்து!

பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடு விவகாரத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா மீது ஓய்வுபெற்ற போலிஸ் அதிகாரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு சிறையில் சொகுசு வசதிகள் - சசிகலாவின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரூபா IPS மீதான வழக்கு ரத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கைமாறியதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா, பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடு தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி கர்நாடக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி கைமாறியதில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவுக்கு தொடர்பு உள்ளதாக கூறி இருந்தார். இந்த குற்றச்சாட்டு எழுந்த பின்பு அதே ஆண்டு ஜூலை 31-ந் தேதி சத்திய நாராயணராவ் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

அதே நேரத்தில் ரூபா கூறிய குற்றச்சாட்டை சத்திய நாராயணராவ் மறுத்து இருந்தார். மேலும் ரூபா மீது கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி பெங்களூரு 9-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சத்திய நாராயணராவ் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.

பெங்களூரு சிறையில் சொகுசு வசதிகள் - சசிகலாவின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரூபா IPS மீதான வழக்கு ரத்து!

அவர் தொடர்ந்திருந்த வழக்கில், ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவிடம் ரூ.20 கோடி கேட்டு அவர் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உரிய விளக்கம் அளிக்க கோரி ரூபாவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றம் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மனு தாக்கல் செய்திருந்தார்.

அதாவது ஐ.பி.எஸ். அதிகாரியான தன் மீது மற்றொரு அரசு அதிகாரி ஒருவர் மானநஷ்ட வழக்கு தொடர அனுமதி இல்லை என்றும், மானநஷ்ட வழக்கை 6 மாதத்திற்குள் தொடர வேண்டும், ஆனால் சத்திய நாராயணராவ் 6 மாதம் கழித்து தான் வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும், இதுபோன்ற காரணங்களால், தனக்கு வழங்கப்பட்ட சம்மன் மற்றும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறி இருந்தார்.

அந்த மனு மீது விசாரணை நடத்திய கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி ரூபா மீதான விசாரணைக்கும், அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் ரூபா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றம் நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

பெங்களூரு சிறையில் சொகுசு வசதிகள் - சசிகலாவின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரூபா IPS மீதான வழக்கு ரத்து!

அந்த மனு மீதான இறுதி கட்ட விசாரணை நிறைவு பெற்ற நிலையில், நேற்று நீதிபதி நாகபிரசன்னா தீர்ப்பு கூறினார். மானநஷ்ட வழக்கு ரத்து அப்போது ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி மீது மற்றொரு அதிகாரி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வது மானநஷ்டம் ஆகாது. மானநஷ்ட வழக்குக்கு இது தொடர்புடையது இல்லை. அரசிடம் அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் மானநஷ்ட வழக்குக்கு இது பொருந்தாது.

மானநஷ்ட வழக்கை 6 மாதத்திற்குள் தொடரவில்லை. ஐ.பி.எஸ். அதிகாரியை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதனையும் பெங்களூரு கீழ் நீதிமன்றத்தில் பெறப்படவில்லை. இந்த வழக்கில் மனுதாரர் ரூபாவுக்கு கீழ் கோர்ட்டு சம்மன் அனுப்பி இருப்பதும் சட்டத்திற்கு எதிரானதாகும். எனவே மனுதாரர் மீது கீழ் உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை, மானநஷ்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று கூறி நீதிபதி நாகபிரசன்னா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடு விவகாரத்தை வெளியே கொண்டு வந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா நிம்மதி அடைந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories