இந்தியா

எட்டு ஆண்டுகளில் எட்டப்படாத வளர்ச்சி.. மோடி ஆட்சியின் அவலங்களை தோலுரித்து காட்டும் ‘முரசொலி’ ஏடு! Part-1

25 ஆண்டுகள் தொடர்ந்தால் சிலிண்டர் விலை என்னவாக இருக்கும்?

எட்டு ஆண்டுகளில் எட்டப்படாத வளர்ச்சி.. மோடி ஆட்சியின் அவலங்களை தோலுரித்து காட்டும் ‘முரசொலி’ ஏடு! Part-1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

எட்டு ஆண்டுகளை எட்டி இருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு. எல்லாவற்றையும் சாதித்து முடித்துவிட்ட களைப்பில் இருக்கிறார்கள். இவர் பிரதமராக ஆகாமல் போயிருந்தால் இந்தியாவே அழிந்து போயிருக்கும் என்றெல்லாம் தங்களுக்குத் தாங்களே மெச்சிக் கொள்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணமானவர், `நான் என்னை பிரதமராகவே கருதிக் கொள்வது இல்லை’ என்று சொல்லிக்கொள்கிறார். அதே நேரத்தில், “இன்னும் 25 ஆண்டுகளுக்கான திட்டம் இருக்கிறது'' என்றும் அவர் சொல்லிக் கொள்கிறார். 25 ஆண்டுகள் தொடர்ந்தால் சிலிண்டர் விலை என்னவாக இருக்கும்? பெட்ரோல் விலை என்னவாக இருக்கும்? டீசல் விலை என்னவாக இருக்கும்? விலைவாசிகள் எந்த வகையில் இருக்கும்? என்பதை இப்போதே ஊகிக்க முடிகிறது.

அத்தகைய விலைவாசியைப் பற்றி அவர் எங்கும் எதிலும் பேசியதாகத் தகவல் இல்லை. குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது மோடி ஒரு கருத்தைச் சொன்னார். “இத்தனை பெரிய தேர்தல் நடந்து முடிந்துள்ளது. எனினும் ஒரு முறையாவது ஒரே ஒரு முறையாவது ஆளும்கட்சியின் தலைவர்கள் ஒரே ஒரு முறையாவது விலைவாசி உயர்வைப் பற்றி வாய் திறந்துள்ளார்களா? இதைப் பற்றி ஒரே ஒரு நெறியாளராவது பேட்டி எடுத்தார்களா? விலைவாசி உயர்வு ஒரு பெரிய விஷயம் இல்லையா? ஊழல் ஒரு முக்கியமான விஷயம் இல்லையா? நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். எனது தேசத்தின் மீடியாக்களுக்கு என்ன ஆகிவிட்டது? குறைந்த பட்சம் ஆளும் கட்சி இதற்காகவாவது வாய் திறக்க வேண்டாமா?”- என்று நரேந்திரமோடி அவர்கள் குஜராத் முதலமைச்சராக இருக்கும் போது காங்கிரஸ் ஆட்சியைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார்.

இப்போதும் அனைவரும் எழுப்பும் கேள்வி இதுதான். இந்த நாட்டின் விலைவாசி உயர்வைப் பற்றி என்றாவது நீங்கள் பேசி இருக்கிறீர்களா? “ஏழைகள், விவசாயிகள், பெண்கள், விளிம்பு நிலை மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயனடையும் வகையிலான நிர்வாகத்தை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்” என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். சொல்லி இருக்கிறாரே தவிர - செய்தாரா?

ஒன்றரை ஆண்டுகள் போராடினார்களே விவசாயிகள்? ஒரு நாள், இருநாள் அல்ல, ஒன்றரை ஆண்டுகள் தலைநகர் டெல்லியில் படுத்துக் கிடந்து போராடினார்களே! டெல்லியின் கதவுகள் திறக்கப்பட 400 நாட்கள் ஆனதே! இது ஒன்று போதாதா?

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் நள்ளிரவில் இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று பிரதமர் அறிவித்தார். இது இந்தியாவின் இரண்டாவது சுதந்திர தினமாகச் சொல்லப்பட்டது. கருப்புப் பணத்தை ஒழிக்கவும், ஹவாலாவை ஒழிக்கவும், கள்ள நோட்டுகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை என்று சொல்லப்பட்டது. எட்டு ஆண்டுகளில் கருப்புப் பணத்தை, ஹவாலாவை, கள்ளநோட்டுகளை ஒழித்துவிட்டதாகப் பிரதமர் அறிவித்திருக்கிறாரா? இதுவரை சொல்லமுடியவில்லை. தன் கையில் இருக்கும் பணத்தை மாற்றுவதற்காக நாட்கணக்கில் அப்பாவிகள் நின்ற கொடுமை மட்டுமே நிகழ்ந்தது.

நாட்டின் வரி விகிதத்தைச் சீர்திருத்தம் செய்யப் போகிறோம் என்றும் இதன் மூலமாக வரிச் செலுத்துவோர் தப்ப முடியாது என்றும் சொல்லி சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வரப்பட்டது. இதன் மூலமாக சில மாதங்களில் வரி அதிகமாக கிடைக்கிறது. சில மாதங்களில் குறைந்தும் விடுகிறது. மாநிலங்களிடம் இருந்த வரி உரிமையைப் பறித்து ஒன்றியத்தின் கையில் பணத்தை மொத்தமாகக் கொண்டு சேர்க்கச்செய்யப்பட்ட தந்திரம் மட்டும்தான் அது. பெரும்பாலான மாநில அரசுகளுக்கு இந்த நிதியை ஒழுங்காக, முறையாக, குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுக்கவில்லை. மாநில அரசுகளையே ஏமாற்றுபவர்கள், மக்களை எப்படி நடத்துவார்கள்?

மக்களை பதற்றத்தில் வைத்திருப்பதுதான் பா.ஜ.க.வின் பாணியாக இருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்தினர் அச்சமடைந்த நிலையில் இருக்கிறார்கள். இந்த பதற்ற நிலைமை பெரும்பான்மையினரின் அமைதியையும் குலைப்பதாக உள்ளது. பா.ஜ.க.வினரின் பேச்சுகள், செயல்பாடுகள் அச்சத்தை விளைவிப்பதாக உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரால் வடகிழக்கு மாகாணங்கள் அதிர்ச்சி அடையவைக்கப்பட்டன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து முஸ்லீம்கள் நீங்கலாக யாரும் வரலாம் என்பது பாகுபாடு காட்டும் சட்டமாக அமைந்திருந்தது. அண்டை நாடுகள் என்று சொன்னவர்கள் கண்ணுக்கு இலங்கை தெரியாமல் போனது விந்தையாக அமைந்திருந்தது. ஈழத்தமிழர்களை இந்த குடியுரிமைச் சட்டமானது உருக்குலைக்கும் சட்டமாக வதைத்தது. நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பின் பிறகு, இதனை கிடப்பில் போட்டுள்ளார்கள். ஆனாலும் எப்போது வேண்டுமானாலும் கொண்டு வருவோம், விரைவில் வரப்போகிறது என்ற அச்சுறுத்தல் அவ்வப்போது ஒன்றிய அமைச்சரால் சொல்லப்பட்டு வருகிறது.

கொரோனா காலக் கசப்புகளை நாம் கண்ணுக்கு முன்னால் பார்த்தோம். 2019 டிசம்பரில் கொரோனாவின் பாதிப்பு உலக நாடுகளில் பரவியது. ஆனால் 2020 மார்ச் 25 ஆம் தேதிதான் பா.ஜ.க. அரசு உணர்ந்தது. ஊரடங்கு அறிவித்தது. 100 நாட்கள் கழித்துத்தான் இவர்கள் கொரோனாவின் தாக்கத்தையே உணர்ந்தார்கள். ‘நாட்டு மக்களிடம் ஊரடங்கு அறிவிப்புக்காக மன்னிப்புக்கேட்கிறேன்' என்று பிரதமர் அறிவித்தார். இதனை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

2019 டிசம்பர் மாதம் உலகில் கொரோனா கண்டறியப்பட்டது. சீனா, தாய்லாந்து, அமெரிக்கா என பரவிவிட்டது. சீனா ஊரடங்கு அறிவித்து விட்டது. வெளிநாட்டவர் வருகையை கட்டுப்படுத்தி விட்டது அமெரிக்கா. இரண்டு வாரங்களுக்குள் தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா, தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கும் அது பரவிவிட்டது. ஜனவரி 25-ம் தேதி கொரோனா தொற்று தொடர்பாக அனைத்து நாடுகளும் கண்காணிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது.

2020 ஜனவரி 26ம் தேதி நம்முடைய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ஒரு பேட்டி கொடுக்கிறார். “சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. அவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்கள்'' என்று சொன்னார். ஜனவரி 28 ஆம் தேதி குஜராத்தில் நடந்த சர்வதேச உருளைக் கிழங்கு மாநாட்டில் உரையாற்றிக் கொண்டு இருந்தார் பிரதமர். குடியுரிமைச் சட்டத்தை மகாத்மா காந்தியே விரும்பினார் என்று டெல்லியில் பொய் சொல்லிக் கொண்டு இருந்தார் பிரதமர்.

ஜனவரி 29-ம் தேதி நிருபர்களைச் சந்தித்த ஒன்றிய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன், “இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை,. மக்கள் அச்சம் அடைய வேண்டாம். 2014ல் எபோலோ வைரஸை இந்தியாவுக்குள் வராமல் தடுத்தோம். அதைப் போல கொரோனாவையும் வரவிடாமல் தடுத்து விடுவோம்” என்று சொன்னார். எத்தகைய ஆபத்து இந்தியாவுக்கும் வரப் போகிறது என்பதை உணரவில்லை. இலங்கையும் சீனாவும் விசாவையே தடை செய்து விட்டது. அப்போது பா.ஜ.க. அரசு என்ன செய்தது தெரியுமா? (தொடரும்..)

banner

Related Stories

Related Stories