இந்தியா

சிகிச்சை ரகசியத்தை அறிய இப்படியோரு வில்லத்தனமா? மைசூரு மருத்துவருக்கு கேரளாவில் நேர்ந்த கொடூரம்..!

சிகிச்சை ரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காக மைசூர் நாட்டு வைத்தியரை கடத்தி சிறை வைத்து துண்டுதுண்டாக வெட்டிக்கொலை. தொழிலதிபர் உள்பட 4 பேர் கைது.

சிகிச்சை ரகசியத்தை அறிய இப்படியோரு வில்லத்தனமா? மைசூரு மருத்துவருக்கு கேரளாவில் நேர்ந்த கொடூரம்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவனந்தபுரம், சிகிச்சை ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக மைசூருவை சேர்ந்த நாட்டு வைத்தியரை கடத்தி ஒரு வருடத்திற்கு மேல் வீட்டில் சிறைவைத்து அடித்து கொடுமைப்படுத்தி கொலை செய்து துண்டு துண்டாக உடலை வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஷாபா செரீப் (60). பாரம்பரிய நாட்டு வைத்தியரான இவர், மைசூருவில் மூல நோய்க்கு சிகிச்சை அளித்து வந்தார். இவரிடம் சிகிச்சை பெற்றவர்களுக்கு விரைவில் நோய் குணமானதால் நாளுக்கு நாள் இவரிடம் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஷாபா செரீபிடம் சிகிச்சை பெறுவதற்காக ஏராளமானோர் சென்றனர். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர்கள் மைசூரு போலிஸில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து வைத்தியர் ஷாபா செரீபை தேடி வந்தனர். ஆனால் 3 வருடங்கள் ஆகியும் அவரை போலிஸாரால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் கைப்பஞ்சேரியை சேர்ந்த ஷெபின் அஷ்ரப் என்ற தொழிலதிபர் நிலம்பூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னுடைய உதவியாளர் உட்பட 7 பேர் வீடு புகுந்து தன்னை கட்டிப்போட்டு ₹ 7 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஷெபினின் உதவியாளரான நவுஷாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்ற கூட்டாளிகள் 6 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இவர்களில் 5 பேர் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து திருவனந்தபுரம் கன்டோன்மெண்ட் போலிஸார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

இதுகுறித்த விவரம் வருமாறு:

மைசூர் நாட்டு வைத்தியர் ஷாபா செரீப் குறித்து ஷெபின் அஷ்ரப்புக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை கடத்தி மிரட்டி சிகிச்சை ரகசியத்தை தெரிந்து கொண்டு தானும் மூல நோய்க்கு சிகிச்சை தொடங்கி பணம் சம்பாதிக்க அவர் திட்டமிட்டார்.

இதன்படி கடந்த 3 வருடங்களுக்கு முன் வைத்தியர் ஷாபா செரீபை மைசூருவிலிருந்து அவர் கடத்தினார். பின்னர் ஷெபின் அஷ்ரப் அவரை நிலம்பூரிலுள்ள தன்னுடைய வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்தார்.

அவரை சங்கிலியால் கட்டிப்போட்டு அடித்துக் கொடுமைப்படுத்தி சிகிச்சை ரகசியத்தை தன்னிடம் கூறுமாறு மிரட்டியுள்ளார். ஆனால் அதற்கு ஷாபா செரீப் மறுத்தார். ஒரு வருடத்திற்கு மேலாக அடித்து கொடுமைப்படுத்தியும் அவர் சிகிச்சை ரகசியத்தை கூறவில்லை.

இந்நிலையில் கடந்த 2020 அக்டோபர் மாதம் ஷெபின் அஷ்ரப் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து வைத்தியர் ஷாபா செரீபை கொலை செய்தார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி அங்குள்ள ஆற்றில் வீசினார். நிலம்பூர் போலீசின் தீவிர விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

வைத்தியர் ஷாபா செரீபை அடித்துக் கொடுமைப்படுத்துவதை ஷெபின் அஷ்ரப்பின் கூட்டாளிகள் ரகசியமாக செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தனர். இந்த வீடியோவை கைப்பற்றிய போலீசார் அதை ஷாபா செரீபின் உறவினர்களுக்கு காண்பித்தனர்.

அந்த வீடியோவில் இருப்பது ஷாபா செரீப் தான் என்பதை அவரது உறவினர்கள் உறுதி செய்தனர். இதை தொடர்ந்து நாட்டு வைத்தியரை கடத்தி கொலை செய்த தொழிலதிபர் ஷெபின்அஷ்ரப் மற்றும் அவரது கூட்டாளிகளான சிகாபுதீன் (36), நவுஷாத் (33) மற்றும் நிஷாத் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

உடலை ஆற்றில் வீசி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதால் உடல் பாகங்களை கண்டுபிடிக்க பெரும் சிரமமாக இருக்கும் என்று போலீசார் கூறினர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories