இந்தியா

’எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என்ன?’.. விமான பயணத்தில் ஸ்மிருதி இரானியிடம் கேள்வி கேட்ட பெண்!

ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் சிலிண்டர் விலை உயர்வு குறித்து விமான பயணத்தின் போது மகளிர் காங்கிரஸ் தலைவர் நேத்தா டிசோசா கேள்வி கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

’எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என்ன?’.. விமான பயணத்தில் ஸ்மிருதி இரானியிடம் கேள்வி கேட்ட பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

5 மாநில தேர்தல் முடிந்ததை அடுத்து கடந்த மாதத்தில் இருந்து தினமும் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தி வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110ஐ கடந்துள்ளது. அதேபோல் டீசல் விலையும் ரூ.100 கடந்துவிட்டது.

இதுபோதாது என்று சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் சுங்க கட்டணத்தையும் ஒன்றிய அரசு உயர்த்தியதன் காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

இப்படி, நான்கு புறங்களில் இருந்தும் கடுமையாக விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ரானியிடம் விமான பயணத்தின் போது பெண் ஒருவர், எரிபொருள் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து அசாமின் குவாஹாட்டி நகருக்கு செல்வதற்காக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த விமானத்தில் மகளிர் காங்கிரஸ் தலைவர் நேத்தா டிசோசாவும் பயணம் செய்துள்ளார்.

பிறகு விமானம் குவாஹாட்டி விமான நிலையம் வந்ததும், பயணிகள் அனைவரும் இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், எரிவாயு விலை உயர்ந்து கொண்டே செல்வதற்கு என்ன காரணம் என்று நேத்தா டிசோசா கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஸ்மிருதி ரானி, 'நாட்டு மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்களை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. 100 கோடி பேருக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது' என மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதை கேட்டு கடுப்பான, நேத்தா, "நான் கேட்ட கேள்விக்கான பதில் இது இல்லை" என கூறியுள்ளார்.

இதனால் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் அவர் விலை உயர்வு குறித்து கேட்டுக் கொண்டே இருந்தார். இதனால் ஆவேசமடைந்த ஒன்றிய அமைச்சர், "தயவுசெய்து பொய் பேசாதீர்கள்" என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த சம்பவத்தை இருவருமே தங்களின் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவை டிசோசா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் அந்த வீடியோ வைரலாக்கி, பதில் சொல்லாமல் ஓடிய ஒன்றிய அமைர்ச்சர் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories