இந்தியா

பெட்ரோல் - டீசல், காஸ் விலை.. இப்போது சுங்கக் கொள்ளை : எல்லாப்பக்கமும் அடிமேல் அடி கொடுக்கும் மோடி அரசு !

தட்டுத்தடுமாறி வாழ்க்கையை ஓட்டலாம் என்றால் அடுத்த அடியாக இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வையும் மக்கள் மீது சுமத்தியுள்ளது ஒன்றிய அரசு.

பெட்ரோல் - டீசல், காஸ் விலை.. இப்போது சுங்கக் கொள்ளை : எல்லாப்பக்கமும் அடிமேல் அடி கொடுக்கும் மோடி அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களை வாட்டி வதைக்கும் ஒன்றிய அரசின் சுங்கக் கட்டண கொள்ளையை வாபஸ் பெற வேண்டும் என்று ‘தினகரன்’ நாளேடு தலையங்கத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 3.4.2022 தேதிய ‘தினகரன்’ நாளேடு தலையங்கத்தில் கூறப்பட் டுள்ளதாவது:

நாடு முழுவதும் 732 சுங்கச் சாவடிகள் இருக்கின்றன. அதில் 48 தமிழகத்தில் இருக்கிறது. இந்த சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை கட்டண உயர்வு கட்டாயம் இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் 1ம் தேதி 26 சுங்கச்சாவடிகளிலும், செப்டம்பர் 1ம் தேதி மீதமுள்ள 22 சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

இதன்படி கடந்த 1ம் தேதியில் இருந்து 26 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு மொத்த தூரம் 705 கிமீ. காரில் செல்ல சுங்க கட்டணம் எவ்வளவு தெரியுமா? ரூ. 1005 தான். ஒரு கிலோ மீட்டருக்கு சராசரியாக ரூ.1.43. இது சுங்கக் கட்டணமா? இல்லை... இல்லை... சுங்கக் கொள்ளை. கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள், தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறார்கள்.

அதற்குள் பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்வு, சமையல் காஸ் விலை அதிகரிப்பு என்று எல்லாப்பக்கமும் அடிமேல் அடி. ஆனாலும், தட்டுத்தடுமாறி வாழ்க்கையை ஓட்டலாம் என்றால் அடுத்த அடியாக இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வையும் மக்கள் மீது சுமத்தியுள்ளது ஒன்றிய அரசு. இந்த கட்டண உயர்வால் சரக்கு வாகன வாடகைகள், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர வாய்ப்புள்ளது. இந்த வாடகை, பேருந்து கட்டணம் எல்லாமே பொதுமக்கள் தலையில்தான் சுமத்தப்பட போகிறது.

தங்கள் முடிவால் விலைவாசி மேலும் உயரத்தான் போகிறது என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் தெரிந்தும் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ள ஒன்றிய அரசுக்கு சாதாரண மக்களின் நிலை பற்றி எந்த கவலையும் இல்லை என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

ஒன்றிய அரசின் விதிமுறையின்படி, இரு சுங்கச்சாவடிகளுக்கு இடையே குறைந்தபட்சம் 60 கி.மீ இடைவெளி இருக்க வேண்டும். அதே போல் நகர்ப்புறத்தில் சுங்கச்சாவடிகள் கூடாது. ஆனால், இதெல்லாம் ஏட்டளவில்தான் உள்ளது. இதை அமல்படுத்தினால், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 16 மட்டுமே செயல்படும். ஆனால், இப்போது செயல்பாட்டில் இருப்பதோ 48 சுங்கச்சாவடிகள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பொறுப்பேற்ற திமுக அரசு இது பற்றி ஒன்றிய அரசிடம் முறையிட்டுள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்று 60 கி.மீ தூரத்துக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் 3 மாதத்தில் மூடப்படும் என்று அண்மையில்தான் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்திருந்தார். அந்த அறிவிப்பு நனவாகும் என்று எல்லாரும் நம்பிக்கொண்டிருந்த வேளையில் இப்படி கட்டண உயர்வு அறிவிப்புதான் வந்துள்ளது. எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு. இதற்கு மேலும் தாங்க மாட்டார்கள், மக்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நடத்துவதுதான் மக்களாட்சி. மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாக்களித்தவர்களை வாட்டி வதைக்கும் இதுபோன்ற முடிவுகளை ஒன்றிய அரசு வாபஸ் பெற வேண்டும்.

banner

Related Stories

Related Stories