இந்தியா

“எப்போதுமே நீங்கள் மன்னராகவே இருந்துவிட முடியாது” : பா.ஜ.கவை வெளுத்துவாங்கிய தயாநிதி மாறன் MP!

குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா மக்களின் அடிப்படை உரிமைக்கும் தனிநபர் அந்தரங்க உரிமைக்கும் எதிரானது என தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் பேசியுள்ளார்.

“எப்போதுமே நீங்கள் மன்னராகவே இருந்துவிட முடியாது” : பா.ஜ.கவை வெளுத்துவாங்கிய தயாநிதி மாறன் MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சிறைக் கைதிகள், குற்றவாளிகளின் கருவிழி, ரத்தம் உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளை சேகரித்து வைக்கும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவை கடந்த வாரம் திங்கட்கிழமை ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தாக்கல் செய்தார்.

இந்த குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் பலரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா மக்களின் அடிப்படை உரிமைக்கும் தனிநபர் அந்தரங்க உரிமைக்கும் எதிரானது என தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் மக்களவையில் பேசியுள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் பேசிய தயாநிதி மாறன் எம்.பி. “நாடு முழுவதும் உள்ள சிறைகளில் தண்டனை கைதிகளை விட 75% விசாரணைக் கைதிகளே அதிகமாக உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் லாக்-அப் மரணங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இந்திய சிறைகளில் மொத்தம் 4,14,033 கைதிகளை அடைப்பதற்கே இடமுள்ளது. 4,14,033 பேரை மட்டுமே அடைக்கக்கூடிய இந்திய சிறைகளில் 20% அதிகமாக 4,88,511 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் உள்ளவர்களில் 1,12,589 பேர் தான் தண்டனை கைதிகள்; 3,71,848 பேர் விசாரணை கைதிகள் தான். விசாரணை கைதிகளில் பலர் சில்லறை குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களாவர். விசாரணை கைதிகளில் பலர் தம் மீதான குற்றங்களுக்கான தண்டனை காலத்தை கடந்தும் சிறையில் உள்ளனர்.

பல லட்சம் விசாரணை கைதிகள் சிறையில் வாடுவது பற்றி எல்லா உள்துறை அமைச்சருக்கு கவலை இல்லை. நீரவ் மோடி, லலித் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்டோரை திரும்பக் கொண்டு வர ஒன்றிய அரசு என்ன சட்டங்களை வைத்துள்ளது?

புதிய மசோதாவால் 24 மணி நேரமும், 48 மணி நேரத்திற்குள்ளோ, 56 மணிக்குள்ளோ குற்றவாளிகளை பிடிப்போம் என்று கூற முடியுமா? நாட்டை அச்சுறுத்தும் வகையில் மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா நாட்டு மக்களின் அடிப்படை உரிமைக்கும் தனிநபர் அந்தரங்க உரிமைக்கும் எதிரானது.

ஒன்றிய உள்துறை அமைச்சர், முன்பு குஜராத் உள்துறை அமைச்சராகவும் பிரதமர் குஜராத் முதல்வராகவும் இருந்தவர்கள்தான். மாநில அமைச்சராக இருந்தபோது மாநில உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதை எதிர்த்தவர்கள்தான் இவர்கள்; குஜராத்திலிருந்து ஒன்றிய அரசில் வந்து அமர்ந்தவுடன் அதிகாரங்களை தாங்களே எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

வாழ்நாள் முழுவதும் நீங்கள் மன்னராகவே இருந்துவிட முடியாது என்று பழமொழி ஒன்று உண்டு; அரசியல் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். இன்று காங்கிரஸுக்கு நடந்தது நாளை பா.ஜ.கவுக்கும் நடக்கக்கூடும். எப்போதும் ஆட்சியில் இருப்போம் என நினைத்து மாநிலத்தின் அதிகாரங்கள் அனைத்தையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories