இந்தியா

காஸ் சிலிண்டர், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு : மக்களின் மீது மென்மேலும் சுமையை திணிக்கும் மோடி அரசு!

வாடி, வதங்கி கிடக்கும் மக்களை கைதூக்கி விடவேண்டியது ஒன்றிய அரசின் கடமை. ஆனால் அதற்கு பதிலாக, மக்கள் மீது மென்மேலும் சுமையை திணித்து, எழுந்திருக்க முடியாத அளவுக்கு வதைப்பது ஏற்க முடியாத செயல்

காஸ் சிலிண்டர், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு : மக்களின் மீது மென்மேலும் சுமையை திணிக்கும் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பெட்ரோல் - டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி, மக்கள் மீது மென்மேலும் சுமையை திணிக்கிறது ஒன்றிய அரசு என்று ‘தினகரன்’ நாளேடு தலையங்கத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 2.4.2022 தேதிய ‘தினகரன்’ நாளேடு தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஒன்றிய அரசு, ஒவ்வொரு மாதமும், முதல் நாளில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் நேற்று வழக்கம்போல் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்குப்பின், டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.2,253 ஆக உள்ளது. கொல்கத்தாவில் 2,351 ரூபாய், மும்பையில் 2,087 ரூபாய், சென்னையில் 2,406 ரூபாய் என்ற அளவில் உள்ளது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.965.50 ஆக உள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் பிரச்னையை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. முக்கியமாக, ஐந்து மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோலிய பொருட்களின் விலை அன்றாடம் உயர்த்தப்பட்டு வருகிறது.

கடந்த 137 நாட்களுக்கு பிறகு தற்போது பெட்ரோல், டீசல் விலை தினசரி 76 பைசா உயர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. தற்போது, வர்த்தக சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் மீதான சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலையை தொடர்ந்து, விமானங்களுக்கு பயன்படும் எரிபொருள் விலையையும் ஒன்றிய அரசு 2 சதவீதம் உயர்த்தியுள்ளது. வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ஓட்டல் மற்றும் டீ கடைகளில் உணவுப்பொருட்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளின் விலையை அதன் உரிமையாளர்கள் உயர்த்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, அடித்தட்டு மக்கள் தலையில்தான் விழுகிறது.

ஒன்றிய அரசின் இதுபோன்ற அதிரடி முடிவு காரணமாக, வாகன போக்குவரத்து கட்டணமும் உயர்கிறது. எல்லா துறையிலும் மறைமுக விலைவாசி உயர்வு தானாக அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒன்றிய அரசு தனது கல்லாவை நிரப்புவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. மாறாக, ஏழை-எளிய, சாமானிய மக்களின் பொருளாதார நிலை பற்றி சிந்திப்பது இல்லை. வீட்டு உபயோக சிலிண்டருக்கான மானியம், அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பும் காற்றில் பறந்துவிட்டது.

ஏற்கனவே, கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தற்போதுதான் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். இச்சூழ்நிலையில், காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்கள் தலையில் மேலும் சுமையை ஏற்றியுள்ளது. வாடி, வதங்கி கிடக்கும் மக்களை கைதூக்கி விடவேண்டியது ஒன்றிய அரசின் கடமை. ஆனால் அதற்கு பதிலாக, மக்கள் மீது மென்மேலும் சுமையை திணித்து, எழுந்திருக்க முடியாத அளவுக்கு வதைப்பது ஏற்க முடியாத செயல். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையால், மக்களிடமிருந்து எதிர்வினை உருவாக நேரிடும்.

banner

Related Stories

Related Stories