இந்தியா

“மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா” : உலக நாடுகளுக்கு ‘பகீர்’ எச்சரிக்கை விடுத்த UNO - என்ன நடக்கிறது?

கடந்த ஒரு வாரத்தில் ஒரு கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் கவனமாக இருக்க உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா” : உலக நாடுகளுக்கு ‘பகீர்’ எச்சரிக்கை விடுத்த UNO - என்ன நடக்கிறது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த ஒரு வாரத்தில் ஒரு கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உலக நாடுகள் கவனமாக இருக்க உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் 2019ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா பரவல் துவங்கியது. இது உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து உருமாறிய கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது சீனாவின் ஜிலான் மாகாணத்தில் வைரஸ் தாக்கம் திடீரென அதிகரிக்கத் துவங்கியுள்ளது. ஒரு கோடி மக்கள் வசிக்கும் இப்பகுதியை மூட சீன அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஐஐடி கான்பூர் விஞ்ஞானிகளின் ஆய்வின்படி வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் நான்காவது அலை பரவும் என்றும் ஆகஸ்ட் மாதத்தில் வைரஸ் தாக்கம் உச்சத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா பரவல் குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படுமா என அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியேஸஸ் ஓர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மார்ச் மாத துவக்கம் முதலே வைரஸ் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி விட்டதாகவும் தற்போது உலகம் வைரஸ் தாக்கத்தால் கத்தியின் கூர்முனையில் நின்று கொண்டிருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

கடந்த 7 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது 8% அதிகமாகும். மேற்கு பசிபிக் நாடுகளில் 29 சதவீதம், ஆப்பிரிக்காவில் 12 சதவீதம், ஐரோப்பாவில் 2 சதவீதம் வரை பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

வரும் நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்தால் இறப்புகளும் கூடும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதனால் கவனமாக இருக்க வேண்டும். தற்போதைய சூழலில் கொரோனாவை எதிர்த்து போராடுவதில் தடுப்பூசி முக்கிய பங்காற்றுகிறது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories