இந்தியா

“ஏராளமான உயிரிழப்புகளை தடுப்பூசிகள் தடுத்துவிட்டன; இல்லையென்றால்..”: புள்ளிவிவரத்தோடு சொன்ன ஒன்றிய அரசு!

இந்தியாவில் ஏராளமான உயிரிழப்புகளை தடுப்பூசிகள் தடுத்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

“ஏராளமான உயிரிழப்புகளை தடுப்பூசிகள் தடுத்துவிட்டன; இல்லையென்றால்..”: புள்ளிவிவரத்தோடு சொன்ன ஒன்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் 3-வது அலையில், ஏராளமான உயிரிழப்புகளை தடுப்பூசிகள் தடுத்துள்ளதாக நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரி்த்து வருகிறது. மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் கொரோனா 3-வது அலையில் இறப்பு எண்ணிக்கை வெகுவாக இல்லை.

இதுவரை கொரோனா 3-வது அலை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்காத ஒன்றிய அரசு நேற்று முதல்முறையாக 3-வது அலை என அறிவித்தது. ஒன்றிய சுகாதாரத்துறை சார்பில் நேற்று டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது.

அப்போது பேசிய நிதி ஆயோக் சுகாதாரக்குழு உறுப்பினர் வி.கே.பால், “நாட்டில் கொரோனா 3-வது அலை அதிகரித்து வருகிறது. மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதால், கொரோனாவில் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு பெருமளவு குறைந்துவிட்டது.

அதேநேரம் இன்னும் 6.50 கோடி மக்கள் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். கொரோனாவுக்கு எதிராக உயிரிழப்பு குறைந்துவிட்டது என்பதற்காக பெருந்தொற்றுக்கு எதிரான நமது போரை நாம் கைவிட்டுவிடக்கூடாது. யாரெல்லாம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.” எனத் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் தலைவர் பல்ராம் பார்கவா பேசுகையில் “2021ஆம் ஆண்டில் 3 ஆயிரம் டெஸ்ட் கிட் வீட்டில் பரிசோதனை செய்ய வாங்கப்பட்ட நிலையில் கடந்த 20 நாட்களில் 2 லட்சம் பரிசோதனை கிட்கள் வாங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறுகையில் “கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி 3,86,452 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர், 3,059 பேர் உயிரிழந்தனர். 31,70,228 பேர் சிகிச்சையில் இருந்தார்கள். அப்போது தடுப்பூசி செலுத்தியவர்கள் வெறும் 2% பேர்தான்.

ஆனால், 2022 ஜனவரி 20ஆம் தேதி 3,17,532 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள், ஆனால், உயிரிழப்பு 380 மட்டும்தான், 19,24,051 பேர்தான் சிகிச்சையில் உள்ளனர். இப்போது 72% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதன் மூலம் தடுப்பூசி செலுத்தினால், உயிரிழப்பு பெருமளவு குறைகிறது என்று தெளிவாகிறது.

முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியும் மக்களுக்கு சிறப்பாக செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 20 ஆம் தேதி வரை சுகாதாரப்பணியாளர்களில் 63% பேர், முன்களப்பணியாளர்களில் 58% பேர், முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தியுள்ளனர். தகுதியுள்ள மூத்த குடிமக்கள் 39% பேர் செலுத்தியுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories