இந்தியா

"உ.பி-யில் அகிலேஷை மீண்டும் முதல்வராக்குவோம்”: பா.ஜ.கவிலிருந்து விலகிய அமைச்சர்- பரபரக்கும் தேர்தல் களம்!

தேர்தல் தேதி நெருங்க நெருங்க பா.ஜ.கவிலிருந்து விலகி பலரும் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வருகின்றனர்.

"உ.பி-யில் அகிலேஷை மீண்டும் முதல்வராக்குவோம்”: பா.ஜ.கவிலிருந்து விலகிய அமைச்சர்- பரபரக்கும் தேர்தல் களம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 10ஆம் துவங்கி மார்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

தேர்தல் தேதி நெருங்க நெருங்க பா.ஜ.க., மீது அதிருப்தியில் உள்ளவர்கள், அக்கட்சியிலிருந்து விலகி அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வருகின்றனர்.

பா.ஜ.கவின் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சுவாமி பிரசாத் மவுரியா அமைச்சர் பதவியில் இருந்து விலகியதுடன், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அவர், சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

அதேபோல், ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி மற்றும் பகவதி சாஹர் ஆகிய எம்.எல்.ஏக்களும் பா.ஜ.கவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.

அவரைத் தொடர்ந்து மற்றுமொரு அமைச்சரான தாரா சிங் சவுகானும் ராஜினாமா செய்தார். தொடர்ந்து ஆயுஷ்துறை அமைச்சரான தரம் சிங் சைனியும் ராஜினாமா செய்துவிட்டு சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அகிலேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூன்றாவது பா.ஜ.க அமைச்சரான தாரா சிங் சவுகான் சமாஜ்வாதியில் இணைந்தார். அவருடன் பா.ஜ.க கூட்டணி கட்சியான ஆப்னா தளத்தின் எம்.எல்.ஏ ஆர்.கே.வர்மா என்பவரும் சமாஜ்வாதியில் இணைந்துள்ளார்.

“உத்தர பிரதேசத்தின் அரசியலை மாற்றி அகிலேஷை மீண்டும் முதல்வராக்குவோம். ஓ.பி.சி., மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். மாற்றம் தவிர்க்க முடியாதது” என முன்னாள் பா.ஜ.க அமைச்சர் தாரா சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

உ.பியில் ஆளும் பா.ஜ.க அமைச்சர்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வருவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories