
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர், மக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளின் ஊதியத்தை நிறுத்தியதுடன் தனது ஊதியத்தையும் நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் கரம்வீர் சர்மா, மக்கள் அளித்த புகார்கள் தொடர்பாக உரிய நேரத்துக்குள் தீர்வு காணாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததுடன், அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று தன் சம்பளத்தையும் நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளார் .
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கரம்வீர் சர்மா. 2010ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், அம்மாநிலத்தில் பல துறைகளில் பணிபுரிந்துள்ளார்.
இவர் கடந்த திங்கட்கிழமை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, முதல்வரின் ஹெல்ப்லைனில் நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து துறை வாரியாக ஆய்வு செய்தார்.
அப்போது புகார்களுக்குத் தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் கோபமடைந்த கரம்வீர் சர்மா, டிசம்பர் மாதத்திற்கான தனது சொந்த ஊதியம் மற்றும் சில அதிகாரிகளின் ஊதியத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட கருவூல அதிகாரியிடம், டிசம்பர் மாதத்திற்கான தனது ஊதியம் மற்றும் உயரதிகாரிகள் சிலரின் ஊதியத்தையும் நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தொடர்ந்து மோசமாகச் செயல்படும் அரசு அதிகாரிகளுக்கு, சம்பளத்துடன், வருடாந்திர சம்பள உயர்வையும் நிறுத்தி வைக்குமாறு பரிந்துரைத்துள்ளார்.








