
தெலங்கானா மாநிலம், ஜெய்சங்கர் பூபாலப்பள்ளியைச் சேர்ந்தவர் ஹர்ஷவர்தன் ரெட்டி. அதேபோல் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் பிரத்யூஷா. இவர்கள் இருவரும் பஞ்சாப்பில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஒன்றாகப் படித்துள்ளனர்.
இதையடுத்து ஹர்ஷவர்தன் ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் விசாகப்பட்டினத்திற்கு வந்த அவர் பிரத்யூஷா சந்திக்க வரும்படி கூறியுள்ளார்.
பின்னர், கல்லூரி நண்பர் என்பதால் அவரை சந்திக்க பிரத்யூஷா சென்றுள்ளார். அப்போது அவரிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஹர்ஷவர்தன் ரெட்டி தெரிவித்துள்ளார். அவரின் காதலை ஏற்க பிரத்யூஷா மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹர்ஷவர்தன் ரெட்டி அவர் மீது பெட்ரோலை ஊற்றித் தீவைத்துள்ளார். பிறகுத் தன் மீதும் பெட்ரோலை ஊற்றித் தீவைத்துக் கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு விரைந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் இருவரும் தீக்காயங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








