இந்தியா

"வரியை உயர்த்திய முட்டாள்தான் அதனை குறைக்க வேண்டும்" : பிரதமர் மோடியை சாடிய தெலங்கானா முதல்வர்!

வாட் வரியை உயர்த்திய முட்டாள்தான் வரியை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசை தெலங்கானா முதல்வர் கடுமையாகச் சாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"வரியை உயர்த்திய முட்டாள்தான் அதனை குறைக்க வேண்டும்" : பிரதமர் மோடியை சாடிய தெலங்கானா முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்தே பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வலியுறுத்தி வந்தனர். ஆனால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு குறைக்கவில்லை.

அண்மையில் நடைபெற்ற 13 மாநில இடைத்தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியடைந்தை அடுத்து, அடுத்து நடைபெறவிருக்கும் 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய பா.ஜ.க அரசு குறைத்துள்ளது. இருந்தபோதும் பெட்ரோல் 100 ரூபாய்க்கு அதிகமாகவே அனைத்து மாநிலங்களிலும் விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க தலைவர்கள் அனைத்து மாநில முதல்வர்களும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்திய முட்டாள்தான் அதை குறைக்க வேண்டும் என மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் சந்திரசேகர ராவ், "தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் ஆட்சி அமைந்ததிலிருந்தே வாட் வரி உயர்த்தப்படவில்லை. ஒரு பைசா கூட நாங்கள் உயர்த்தவில்லை.

எந்த முட்டாள் நம்மிடம் வாட் வரியை குறைக்கச் சொல்வான்? வாட் வரியை உயர்த்திய முட்டாள்தான் அதைக் குறைக்க வேண்டும். மேலும் பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை ஒன்றிய அரசு நீக்கவேண்டும். இது சாத்தியமானதும் கூட. மேலும் மக்களுக்கு நல்லதும் கூட.

கடந்த ஏழு ஆண்டுகளில் பா.ஜ.க அரசு என்ன செய்தது? இந்தியாவின் ஜி.டி.பி வங்கதேசம், பாகிஸ்தானை விட குறைவாக உள்ளது. ஆனால் ஒன்றிய அரசோ வரிகளை உயர்த்தியுள்ளது. மேலும் மாநில பா.ஜ.க தலைவர் சஞ்சய் விவசாயிகளிடம் நெல் பயிரிடுமாறும், அதை ஒன்றிய அரசு வாங்கிக்கொள்ளும் எனவும் கூறி பொய்யைப் பரப்பி வருகிறார். இப்படி தேவையற்ற முறையில் பேசிக்கொண்டிருந்தால் உங்கள் நாக்கை அறுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

வாட் வரியை உயர்த்திய முட்டாள்தான் வரியை குறைக்க வேண்டும் என மோடி அரசை தெலங்கானா முதல்வர் சாடியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories