இந்தியா

”அவர் ஒன்றும் zoo-ல் இருக்கும் விலங்கு அல்ல” - ஒன்றிய அமைச்சரின் செயலால் மன்மோகன் சிங் மகள் கொதிப்பு!

மன்மோகன் சிங்கை காண வந்த ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் செயலால் தாமன் தீப் சிங் உள்ளிட்ட குடும்பத்தினர் கடும் அதிருப்தி.

”அவர் ஒன்றும் zoo-ல் இருக்கும் விலங்கு அல்ல” - ஒன்றிய அமைச்சரின் செயலால் மன்மோகன் சிங் மகள் கொதிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டுவதாக பிரதமர் மோடி உட்பட பல தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கின் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்றிருக்கிறார்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு மன்சுக் மாண்டவியா ஒரு போட்டோகிராஃபர் பட்டாளத்தையே உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். மேலும், 89 வயதுடைய மன்மோகன் சிங்கை காண வரும் போதும் புகைப்படக்காரர்களை அழைத்து வந்திருக்கிறார்.

இதனால் கடுமையான அதிருப்திக்குள்ளாகினர் மன்மோகன் சிங் குடும்பத்தினர். இது தொடர்பாக பேசியுள்ள மன்மோகன் சிங்கின் மகள் தாமன் தீப் சிங், மன்சுக் மாண்டவியாவுடன் புகைப்படக்காரரும் உள்ளே வருவதற்கு எனது தாய் அனுமதிக்கவில்லை. ஆனாலும் அவரது பேச்சை கேட்காமல் உள்ளே நுழைந்திருக்கிறார்கள்.

எனது தந்தை முதியவர். அவர் ஒன்றும் உயிரியல் பூங்காவில் இருக்கும் மிருகம் அல்ல. இக்கட்டான சூழலில் இருந்து விடுபட வேண்டும் என நினைக்கிறோம். பார்வையாளர்கள் எவரையும் அனுமதிப்பதில்லை. ஏனெனில் தந்தைக்கும் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் வந்து விசாரித்தது மகிழ்ச்சிதான். இருப்பினும், இந்த சூழலில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கும் மனநிலையில் என்னுடைய பெற்றோர் இருக்கவில்லை. ” என The Print செய்தி தளத்திடம் தாமன் தீப் சிங் கூறியுள்ளார்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் தரப்பிலிருந்து சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் கிடைக்கப் பெறவில்லை என The print செய்தி தளம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஒன்றிய அமைச்சரின் செயலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories