இந்தியா

தாத்தாவின் கனவு நிறுவனத்தை மீட்டெடுத்த ரத்தன் டாடா... ‘ஏர் இந்தியா’ மீண்டும் டாடா வசமான கதை!

1953-ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஏர் இந்தியா, 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டாடா நிறுவனத்துக்குச் சொந்தமாகியுள்ளது.

தாத்தாவின் கனவு நிறுவனத்தை மீட்டெடுத்த ரத்தன் டாடா...  ‘ஏர் இந்தியா’ மீண்டும் டாடா வசமான கதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1953-ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஏர் இந்தியா, 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டாடா நிறுவனத்துக்குச் சொந்தமாகியுள்ளது.

அரசு நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. இதனால், அந்நிறுவனத்தை விற்க கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஏலம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஏலத்தில் டாடா நிறுவனம் வெற்றி பெற்றுள்ளதாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது.

ஏர் இந்தியாவை ரூ.18,000 கோடிக்கு டாடா நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. வரும் டிசம்பர் இறுதிக்குள் விற்பதற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவு பெறும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் 68 ஆண்டுகளுக்குப் பின்னர், ஏர் இந்தியா மீண்டும் டாடா வசம் செல்கிறது.

இரும்பு உற்பத்தியில் தங்கள் வணிகத்தைத் தொடங்கிய டாடா குழுமம் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனமாக உள்ளது. தண்ணீர், உப்பு தொடங்கி விமானம் வரை பல்வேறு தொழில்களிலும் தடம் பதித்துள்ளது டாடா.

1929இல் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றவர் ஜே.ஆர்.டி டாடா. இந்தியாவில் விமானப் பயணம் இன்று போல எளிதாக இல்லாத காலகட்டத்தில் ஜே.ஆர்.டி டாடா, ஏர் சர்வீஸ் நிறுவனத்தை உருவாக்கினார். 1932ல் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னர் டாடா ஏர்லைன்ஸ் என்று மாற்றப்பட்டது.

இரண்டு எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் மூலம் முதலில் கடிதங்களை கொண்டு செல்லும் சேவையை செய்து வந்தது டாடா. பின்னர் பயணிகளை ஏற்றிச் செல்லத் தொடங்கியது.

இரண்டாம் உலகப் போரின்போது இந்தியாவில் இருந்து வீரர்களை அனுப்பவும், கடிதங்களை கொண்டு செல்லவும், உணவுப் பொருட்கள், ஆயுதங்களைக் கொண்டு செல்லவும் டாடா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

தாத்தாவின் கனவு நிறுவனத்தை மீட்டெடுத்த ரத்தன் டாடா...  ‘ஏர் இந்தியா’ மீண்டும் டாடா வசமான கதை!

இரண்டாம் உலகப் போர் முடிந்து 1946ல் ஏர் இந்தியா நிறுவனம் பொது பங்கு நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. 1948ல் இதன் 49 சதவிகித பங்குகளை ஒன்றிய அரசு வாங்கியது. 1953ல் கொண்டு வரப்பட்ட விமான போக்குவரத்து நிறுவன சட்டம் காரணமாக டாடா ஏர்லைன்ஸின் பெருவாரியான பங்குகள் அரசால் வாங்கப்பட்டது.

இதனால் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் அரசின் வசம் சென்று, ‘ஏர் இந்தியா’ என்று பெயர் மாற்றப்பட்டது. ஆனாலும் இதன் சேர்மனாக ஜே.ஆர்.டி டாடா 1977 வரை இருந்தார். 1978-ம் ஆண்டு 'ஏர் இந்தியா' விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி 213 பேர் பலியானதால், ஏர் இந்தியாவின் தலைவர் பதவியில் இருந்து ஜே.ஆர்.டி.டாடாவை நீக்கியது அரசு.

1986-ம் ஆண்டு ரத்தன் டாடா 'ஏர் இந்தியா'வின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். 90-களின் இறுதியில் ஏர் இந்தியா நஷ்டமடையத் தொடங்கியது. பல்லாயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் அடைந்தது.

இந்நிலையில்தான், கடுமையான நிதிச்சுமை காரணமாகவும், இழப்பு காரணமாகவும் இந்த நிறுவனத்தை ஒன்றிய அரசு விற்க முடிவு எடுத்தது. முதலில் 76% பங்குகளை ஏலம் விட நினைத்தது ஒன்றிய அரசு.கடனில் ரூ.33,392 கோடி அளவுக்கு வாங்கும் நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

ஆனால், அதை வாங்க எந்தவொரு தனியார் நிறுவனமும் முன்வரவில்லை. இதையடுத்து, 2019-ம் ஆண்டு இறுதியில் 100% பங்குகளையும் விற்க முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. வாங்கும் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும் கடன் தொகையும் ரூ.30,000 கோடியாக குறைக்கப்பட்டது.

இதற்கென நடைபெற்ற ஏலத்தில் அடித்துப் பிடித்து வென்றுள்ளது டாடா நிறுவனம். இதன் மூலம் 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியாவை தன்வசப்படுத்தியுள்ளது டாடா குழுமம்.

இதனையடுத்து, டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கியவரும் தனது தாத்தாவுமான ஜே.ஆர்.டி டாடா ஏர் இந்தியா விமானம் முன் இருக்கும் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘வெல்கம் பேக் ஏர் இந்தியா’ என வரவேற்று மகிழ்ந்துள்ளார்.

68 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் நிறுவனத்தை அரசிடமிருந்து பெரும் நஷ்டத்தில் இருக்கும் சூழலில் வசப்படுத்தியுள்ள டாடா நிறுவனம், மீண்டும் லாபத்தை நோக்கித் திருப்புமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories