இந்தியா

“இதுதான் உ.பி அரசு கொடுத்த அனுமதியா?” : போலிஸார் தடுத்ததால் விமான நிலையத்திலேயே தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்!

அனுமதி மறுத்த உ.பி போலிஸார், அவரை வெளியே செல்லவிடாமல் தடுத்ததால் ராகுல் காந்தி விமான நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

“இதுதான் உ.பி அரசு கொடுத்த அனுமதியா?” : போலிஸார் தடுத்ததால் விமான நிலையத்திலேயே தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமமான பன்வீர்பூரில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்.

அப்போது பா.ஜ.க அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் விவசாயிகள் இருவர் உயிரிழந்தனர். இதனால் அங்கு வன்முறை வெடித்ததில் பலர் பலியாகினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லக்கிம்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வலியுறுத்திய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களை சந்திக்க, அகிலேஷ் யாதவ் லக்கிம்பூர் செல்ல இருந்தார். அவரை உ.பி போலிஸார் தடுத்து நிறுத்தி பின்னர் வீட்டுக்காவலில் வைத்தனர்.

வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, போலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

லக்கிம்பூர் செல்ல முயன்ற சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் லக்னோ விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனையடுத்து விமான நிலையத்திலேயே அவர் தர்ணாவில் ஈடுபட்டார். பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் உள்ளிட்டோருக்கும் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டது. மேலும், லக்கிம்பூர் கேரி மாவட்டத்துக்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாது என 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இருப்பினும் தடையை மீறி லக்கிம்பூர் செல்ல உள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தார். இதற்கிடையே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உடன் 3 பேருக்கு உ.பி., மாநில அரசு அனுமதி அளித்தது. தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோருடன் லக்னோ விமான நிலையம் வந்த ராகுல் காந்திக்கு அவரது வாகனத்தில் லக்கிம்பூர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

லக்னோ விமான நிலையத்திலிருந்து காவல்துறை வாகனத்தில் மட்டுமே செல்லமுடியும் என்று உ.பி போலிஸார் கூறியதால், “எனக்கு நீங்கள் ஏன் வாகனம் ஏற்பாடு செய்து தர வேண்டும்; எனது காரில் தான் செல்வேன்” என ராகுல் காந்தி கூறினார்.

இதற்கு அனுமதி மறுத்த உ.பி போலிஸார், அவரை வெளியே செல்லவிடாமல் தடுத்ததால் ராகுல் காந்தி விமான நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல், “என்னை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல விடவில்லை. இது என்ன வகையான அனுமதி. உ.பி அரசு வழங்கிய அனுமதியின் நிலையை கொஞ்சம் பாருங்கள்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories