இந்தியா

5வது முறையாக துப்பாக்கிச் சூடு; தலைநகரிலேயே மோடி அரசின் லட்சணம் இதுதான்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டுமே சுமார் நான்கு முறை இதே ரோகிணி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது.

5வது முறையாக துப்பாக்கிச் சூடு; தலைநகரிலேயே மோடி அரசின் லட்சணம் இதுதான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரபல தாதாவான ஜிதேந்தர் கோகி குற்ற வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக டெல்லி ரோகிணி நீதிமன்றத்திற்கு சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டிருக்கிறார். அப்போது அவரது எதிரிகள் வழக்கறிஞர் உடையில் வந்து ஜிதேந்தரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதனையடுத்து போலிஸார் ரவுடியை சுட்டவர்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் ஜிதேந்தர் உட்பட மூவர் பலியானதோடு சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என பலரும் நீதிமன்றத்தை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். மேலும் இந்த சம்பவத்தால் போலிஸாரே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இப்படி இருக்கையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் இது போன்று அவ்வப்போது துப்பாக்கிச் சூடு, கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெறுவது அண்மைக்காலங்களாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வாழ்வதற்கே தகுதியற்ற மாநிலமாக டெல்லி உருவெடுத்துள்ளது.

ஏற்கெனவே சுற்றுச்சூழல், குடிநீர் போன்ற பிரச்னையால் மக்கள் அவதியடைந்து வரும் வேளையில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பொது சுகாதாரம் என பலவற்றுக்கும் பாதுகாப்பில்லாத சூழலே நிலவுகிறது. இப்படியான சூழலில் நீதிமன்றத்திலேயே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டுமே சுமார் நான்கு முறை இதே ரோகிணி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது.

இவ்வாறு வன்முறையின் களமாக ஜனநாயக நாட்டில் உள்ள நீதிமன்றம் உருவெடுப்பது அதுவும் தலைநகரான டெல்லியில் நடந்திருப்பது ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து, அரசை பிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தாமல் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு ஒன்றிய பாஜக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும், டெல்லி காவல்துறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு குறைபாட்டைக் கண்டித்து, நாளை மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட முடிவு எடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories