இந்தியா

"நாட்டில் உள்ள பெண்களுக்கு எங்களால்தான் பாதுகாப்பு” : சிறிதும் கூச்சமின்றிப் பேசிய பா.ஜ.க தலைவர்!

நாட்டிலுள்ள பெண்கள் அனைவரையும் பாதுகாப்பது தாங்கள்தான் என்கிற ரீதியில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேசியிருப்பது கடும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது.

"நாட்டில் உள்ள பெண்களுக்கு எங்களால்தான் பாதுகாப்பு” : சிறிதும் கூச்சமின்றிப் பேசிய பா.ஜ.க தலைவர்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்வரை மட்டுமே பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கலாபுர்கி நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சி.டி.ரவி, “இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மட்டுமே பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இங்கு இந்துக்கள் சிறுபான்மையினர் ஆனவுடன் ஆப்கானிஸ்தானில் நடந்தது இங்கேயும் நடக்கும்.

இந்து அல்லாதவர்கள் இந்தியாவில் பெரும்பான்மையானவுடன், அவர்கள் ஷரியத் பற்றி பேசுவார்கள், அம்பேத்கரின் அரசியலமைப்பு பற்றி அல்ல” எனப் பேசியுள்ளார்.

பா.ஜ.கவினர் மீது தொடர்ச்சியாக பாலியல் புகார்கள் கிளம்பி வரும் நிலையில் பா.ஜ.க தலைவர் சி.டி.ரவி இவ்வாறு பேசியிருப்பது கடும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது.

சமீபத்தில் தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் மீதான பாலியல் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ.க-வில் உள்ள பெண்களிடம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அநாகரிகமாக நடந்துகொள்வதாகவும் புகார் எழுந்தது.

சி.டி.ரவியே, பெண்கள் விவகாரத்தில் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக நூற்றுக்கணக்கில் புகார்கள் வந்திருப்பதால் மேலிடத் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், ஒரு பா.ஜ.க தலைவர் மீது மட்டும் 134 புகார்கள் வந்துள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன்னர் அதிர்ச்சியைக் கிளப்பினார்.

நாடு முழுவதும் பா.ஜ.க-வில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள பலரும், பா.ஜ.கவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர்.

பா.ஜ.கவில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவிவருவதாக பா.ஜ.கவில் உள்ள பெண்களே தெரிவித்து வரும் நிலையில், நாட்டிலுள்ள பெண்கள் அனைவரையும் பாதுகாப்பது தாங்கள்தான் என்கிற ரீதியில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேசியிருப்பது கடும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories