இந்தியா

தானிஷ் சித்திக் இறுதி ஊர்வலத்துல கூட்டத்த பாருங்க: பொய்யான படத்தை பரப்பி மூக்குடைபட்ட இந்து மக்கள் கட்சி!

தானிஷ் சித்திக் இறுதி ஊர்வலத்தில் கொரோனா விதிகளை மீறி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதாகப் பொய்யான தகவலை இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ளது.

தானிஷ் சித்திக் இறுதி ஊர்வலத்துல கூட்டத்த பாருங்க: பொய்யான படத்தை பரப்பி மூக்குடைபட்ட இந்து மக்கள் கட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் நிலவிய கொரோனாவின் கோர முகத்தைப் புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்த ராய்ட்டர்ஸ் புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலின் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்தது.

புலிட்சர் விருது பெற்ற தானிஷ் சித்திக் மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் தானிஷ் சித்திக் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

ஆப்கானிஸ்தானில் உயிரிழந்த தானிஷ் சித்திக் உடல் டெல்லி கொண்டு வரப்பட்டு, ஜூலை 18ம் தேதி ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இது குறித்த செய்திகளும் நாளேடுகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்தன.

அதேசமயம், கொரோனா தொற்று சூழலில் மோடி அரசின் கையாலாகத்தனத்தை தனது புகைப்படங்களால் வெளிச்சம் போட்டுக்காட்டிய தானிஷ் சித்திக் மீது பா.ஜ.க, இந்துத்வா வெறியர்கள் வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தானிஷ் சித்திக் இறுதிச்சடங்கின்போது கொரோனா விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதாகப் பதிவிட்டு, ஒரு படத்தையும் இணைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் பாலம் ஒன்றின் அடியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனம் ஒன்று செல்வது போன்றும், வாகனத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் கூடியிருப்பது போன்றும் காட்சியளிக்கிறது.

பொதுவாகவே பா.ஜ.க மற்றும் இந்து மக்கள் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொய்யான படங்களைப் பதிவேற்றுவதை வழக்கமாகவே கொண்டுள்ளனர் என்பதால், இணையவாசிகள் பலரும் இந்த படத்தின உண்மைத்தன்மையை ஆராய்ந்துள்ளனர்.

அப்போது, இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட படம், பங்களாதேஷ் நாட்டின் சிட்டகாங் நகரில் கூடிய கூட்டம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் 2019ஆம் ஆண்டு மும்பையில் சிஏஏ, என்ஆர்சி போராட்டத்தில் முஸ்லீம் மக்கள் கூடிய கூட்டம் என இதே புகைப்படத்தைப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories