இந்தியா

"முதல் டோஸ் ஒன்றும், 2வது டோஸ் வேறு தடுப்பூசியும் போட்டால் என்னவாகும்?" : எய்ம்ஸ் தலைவர் கூறுவது என்ன?

கொரோனா மூன்றாவது அலையை நாம் எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

"முதல் டோஸ் ஒன்றும், 2வது டோஸ் வேறு தடுப்பூசியும் போட்டால் என்னவாகும்?" : எய்ம்ஸ் தலைவர் கூறுவது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், ரஷ்யாவின் ஸ்புட்சின் வி தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் போடப்படுகிறது.

ஒன்றிய அரசு கொடுத்துள்ள கொரோனா தடுப்பூசிக்கான வழிகாட்டுதலின்படி முதல் தவணையில் போட்ட ஊசியே இரண்டாவது தவணையிலும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உத்தர பிரதேசத்தில் 20 பேருக்கு முதல் தவணையில் போட்ட ஊசிக்கு பதிலாக இரண்டாம் தவணையில் வேறு ஊசி போடப்பட்டது. இப்படியான சம்பவங்கள் நாட்டின் சில இடங்களில் அரங்கேறியுள்ளன. மேலும் இப்படி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இரண்டு டோஸ்களுக்கு வெவ்வேறு தடுப்பூசிகள் போடப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் எதிர்ப்பணுக்கள் அதிகளவில் உருவாகுகின்றன என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இதனால், இந்தியாவிலும் முதல் தவணையில் ஒரு ஊசியும், இரண்டாவது தவணையில் ஒரு ஊசியும் போட்டுக் கொண்டால் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

"முதல் டோஸ் ஒன்றும், 2வது டோஸ் வேறு தடுப்பூசியும் போட்டால் என்னவாகும்?" : எய்ம்ஸ் தலைவர் கூறுவது என்ன?

இதையடுத்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா இதுதொடர்பாக பேசுகையில், "முதல் டோஸுக்கு ஒரு தடுப்பு மருந்தையும், இரண்டாவதாக வழங்கும் பூஸ்டர் டோஸுக்கு இன்னொரு தடுப்பு மருந்தையும் சேர்த்து வழங்கினால் என்னவென்ற கேள்வி ஏற்கெனவே எழுந்துள்ளது. இதனால், பக்கவிளைவுகள் சற்று அதிகமாக இருப்பதாக சில ஆய்வுகளும், பக்க விளைவுகள் இருந்தாலும் கூட எதிர்ப்பணுக்களை சற்று அதிகமாக உருவாக்குவதாகவும் சில தரவுகளும் கூறுகின்றன.

ஆனால், இதை உறுதிப்படுத்த நிறைய தரவுகள் வேண்டும். இன்னும் சில காலத்தில் இந்தியாவில் உள்நாட்டு தடுப்பூசிகளுடன் ஃபைஸர், மாடர்னா, ஸ்புட்னிக் V, சைடஸ் காடில்லா என நிறைய தடுப்பு மருந்துகள் கிடைக்கும். ஆகையால் அந்த நேரத்தில் எந்த இரண்டு மருந்துகளை முதல், இரண்டாவது டோஸ்களுக்கு கலந்து கொடுக்கலாம் என்பதை ஆய்வு செய்ய நிறைய வாய்ப்பிருக்கும்.

இப்போதைக்கு, கோவாக்சின், கோவிஷீல்டு மாறிமாறி கொடுப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. இருப்பினும் இதனை கொள்கை முடிவாக செயல்படுத்த நிறைய தரவுகள் தேவைப்படுகிறது. அரசாங்கமும் இதில் கவனம் செலுத்தி வருகிறது. இன்னும் ஒருசில மாதங்களில் இதுதொடர்பான முடிவை அரசு வெளியிடும்.

அதேபோல், மூன்றாவது அலை மோசமாக இருக்குமா என்பதை இப்போதே கணித்துக் கூற முடியாது. ஆனால், மூன்றாவது அலையை எதிர்கொள்ள நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இரண்டாவது அலையிலிருந்த அலட்சியமும் கூடாது. மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் வைரஸ் அதிகமாகியிருப்பதால் அரசு சில கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளே நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும்" என்றார்.

banner

Related Stories

Related Stories