இந்தியா

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை..? - கொரோனா காலத்திலும் அசராத அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சி!

அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்ததால், ஆசியாவின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரரான அதானி, ரூ.73,250 கோடியை இழந்துள்ளார்.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை..? - கொரோனா காலத்திலும் அசராத அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட பெரும் ஏற்றத்தைச் சந்தித்து வந்த அதானி பங்குகள் திடீரென பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.

மொரீசியஸ் நாட்டில் இருந்து செயல்படும் மூன்று முதலீட்டு நிறுவனங்களின் கணக்கை முடக்க தேசிய பத்திரம் மற்றும் நிதித்துறை பங்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அலுப்புல இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏ.பி.எம்.எஸ். இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய மூன்று முதலீட்டு நிறுவனங்கள் மொரீசியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் பகுதியில் இருந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த முதலீட்டு நிறுவனங்கள் மூலம் அதானிக்கு சொந்தமான அதானி என்டர்ப்ரைசஸ், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி க்ரீன் ஆகிய நிறுவனங்களில் முறையே 6.82, 8.03, 5.92 மற்றும் 3.58 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது, இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 43,500 கோடி.

சட்ட விரோத பண பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் அடிப்படையில் இந்த பங்குகளை வாங்குவதற்கு தேவையான பணம் எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்த விவரங்களை இந்திய பங்குச் சந்தை ஆணையம் கேட்டிருந்தது.

இந்திய பங்குச் சந்தை ஆணையம் வழங்கிய காலக்கெடுவையும் தாண்டி இதற்கான விளக்கம் தராததால் இந்த மூன்று முதலீட்டு நிறுவனங்களின் வெளிநாட்டு பங்கு முதலீட்டு நிறுவனங்களுக்கான கணக்கை முடக்கி வைத்துள்ளது.

மே மாதம் 31 தேதி இந்த கணக்குகளை முடக்கி வைத்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இதனால் புதிய பங்குகளை வாங்கவோ அல்லது வாங்கிய பங்குகளை விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பங்குச் சந்தையில் கடுமையாக எதிரொலித்துள்ளது.

இந்திய பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தின் ஆறு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. அதில் ஐந்து பங்குகள் 4.9 சதவீதம் முதல் 9.2 சதவீதம் வரை விலை வீழ்ச்சி கண்டிருக்கின்றன. இதனால் அதானி குழுமம் மீது முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பல கோடி நஷ்டமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்ததால், ஆசியாவின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரரான அதானி, ரூ.73,250 கோடியை இழந்துள்ளார். இதனால் அவர் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற இடத்திலிருந்து பின்னுக்குச் செல்வார் எனக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories