இந்தியா

"நாங்கள் போராடுவோம், வெல்வோம்" : இன்று கருப்பு தினம் அனுசரிப்பு... டெல்லி விவசாயிகள் போராட்டம்!

புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் இன்று கருப்பு தின அனுசரிப்பு போராட்டம் நடைபெற்றது.

"நாங்கள் போராடுவோம், வெல்வோம்" : இன்று கருப்பு தினம் அனுசரிப்பு... டெல்லி விவசாயிகள் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய அரசு கொண்டுவந்த விவசாய விரோத புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதியிலிருந்து டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையிலும் கடந்த ஆறு மாதமாக போராடி வருகிறார்கள்.

கொரோனாவால் விவசாயிகள் போராட்டத்தையே மறந்துவிட்ட மத்திய அரசுக்கு நாங்கள் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதை நினைவூட்டும் வகையிலும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டியும் மே 26ம் தேதி கருப்பு தினம் அனுசரிக்கப் போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

விவசாயிகளின் இந்த கருப்பு தின அனுசரிப்புக்குக் காங்கிரஸ், ஷிரோமணி அகாலிதளம், தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி உட்பட பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து விவசாயிகள் திட்டமிட்டபடி இன்று டெல்லி எல்லைப்பகுதியான சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி ஆகிய இடங்களில் போராடி வரும் விவசாயிகள் கறுப்புக் கொடிகளை ஏந்தி, நரேந்திர மோடியின் உருவபொம்மைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"நாங்கள் போராடுவோம், வெல்வோம்" : இன்று கருப்பு தினம் அனுசரிப்பு... டெல்லி விவசாயிகள் போராட்டம்!

அதேபோல் பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தில் உள்ள சித்வான் கலான் என்ற கிராமத்தில் பெண்கள் ஒரு போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர். அப்போது அவர்கள் "நாங்கள் போராடுவோம், வெல்வோம்" என்று முழக்கங்களை எழுப்பினர். அமிர்தசரஸ் மாவட்டத்தில் விவசாயிகள் குழுவினர் கறுப்புக் கொடிகளைப் பிடித்துக்கொண்டு பேரணியாக சென்றனர்.

பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும், விவசாயிகள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியுள்ளனர். மேலும் போராட்டத்தின் போது பிரதமரின் உருவபொம்மைகளை எரித்துள்ளனர். அதேபோல் ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களிலும் விவசாயிகளின் கருப்பு தின அனுசரிப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டிலும் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்றன. அதேபோல், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என மத்திய மோடி அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமூக வலைத்தளங்களில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து #BlackDay எனும் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories