கொரோனா தடுப்பூசித் திட்டத்தை மோடி அரசு துரிதப்படுத்தாவிட்டால் 6 முதல் 8 மாதங்களில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என ஹைதராபாத் ஐ.ஐ.டி பேராசிரியரும் மத்திய அரசால் அமைக்கப்பட்ட ‘தேசிய கோவிட்-19 சூப்பர்மாடல் குழு’ தலைவருமான எம்.வித்யாசாகர் எச்சரித்துள்ளார்.
இத்தாலி நாட்டின் மிலன் நகரில் உள்ள சான் ரஃபேல் என்ற மருத்துவமனை வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின் சில குறிப்புகளை சுட்டிக்காட்டி ஐ.ஐ.டி பேராசிரியர் எம்.வித்யாசாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் சுட்டிக்காட்டியுள்ள ஆய்வுக் கட்டுரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் ரத்தத்தில் 8 மாதங்களில் கொரோனா ஆன்ட்டிபாடிக்களின் அளவு குறைந்து தொற்று எதிர்ப்பும் குறைந்துவிடுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்துக் கூறியுள்ள பேராசிரியர் வித்யாசாகர், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்ட்டிபாடிகள் குறையத் தொடங்கினால், நோய் எதிர்ப்புத் திறனும் குறைய வாய்ப்புள்ளது. அப்போது ஏற்கெனவே தொற்று ஏற்பட்டவர்களுக்கு இரண்டாவது முறை தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அப்படி நடக்கும் பட்சத்தில் மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசித் திட்டத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் 6 முதல் 8 மாதங்களில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இந்தியாவில் செப்டம்பர் 2020ல் கொரோனா வைரஸ் உச்சம் தொட்டது பின்னர் அக்டோபரில் தேசிய அளவில் குறையத் தொடங்கியது. பின்னர் மார்ச் 2021ல் இருந்து மீண்டும் தொற்று வேகமெடுத்துள்ளது.
முதல் அலைக்குப் பின்னர் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தி, கொரோனா தடுப்பு நடைமுறைகளை மிகமிகக் கடுமையாகப் நடைமுறைப்படுத்தி இருந்தால் இப்போது இரண்டாவது அலை ஏற்பட்டிருக்காது என நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் அறிவியல் ஆலோசகரான கே.விஜயராகவனும் இந்த மாத தொடக்கத்தில் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.