இந்தியா

சேவை கட்டணம் பேரில் ரூ.300 கோடியை வாரி சுருட்டிய எஸ்.பி.ஐ - ஐஐடி ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட் அம்பலம்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பாரத் ஸ்டேட் வங்கி ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்குகளில் இருந்து 300 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

சேவை கட்டணம் பேரில் ரூ.300 கோடியை வாரி சுருட்டிய எஸ்.பி.ஐ - ஐஐடி ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட் அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை (டெபாசிட்) இல்லை என்ற காரணத்திற்காக, வங்கிகள் அபராதம் வசூலிப்பது வழக்கமானதுதான். ஆனால், குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவைப்படாத ஜீரோ பேலன்ஸ் (zero balance) கணக்குகள் எனப்படும் அடிப்படை வங்கிக் கணக்குகளிலிருந்தும், எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் ரூ.300 கோடி அளவிற்கு கட்டணம் வசூலித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக மும்பை ஐ.ஐ.டி., ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், அடிப்படை சேமிப்பு கணக்குகளில் (Basic Sav-ings BankDeposit Ac-counts) இருந்து, வாடிக்கையாளர்கள் 4 பரிவர்த்தனைகளுக்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும், பொதுத்துறை வங்கியான, ‘ஸ்டேட் பாங்க்ஆப் இந்தியா’ (SBI), 17.70 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.

சேவை கட்டணம் பேரில் ரூ.300 கோடியை வாரி சுருட்டிய எஸ்.பி.ஐ - ஐஐடி ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட் அம்பலம்!

இவ்வாறு, 2015 முதல் 2020 வரையிலான ஐந்தாண்டுகளில் 12 கோடி கணக்குகளில் இருந்து, சுமார் 300 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’, 44 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நாட்டின் மிகப் பெரிய வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்ததாக, நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அரசுத்துறை வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) உள்ளது. இந்த வங்கியும், அதே 2015-20 காலகட்டத்தில் 3.9 கோடி வாடிக்கையாளர்களிடமிருந்து 9.9 கோடி ரூபாயை, அடிப்படை வங்கி சேமிப்புக் கணக்குகளிலிருந்து கட்டணமாக வசூலித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் 2013-ஆம் ஆண்டு வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே அடிப்படை வங்கிக் கணக்குகள் மீது கட்டணங்கள் வசூலிக்கப் பட வேண்டும். இதன்படி பார்த்தால், அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். அடிப்படை வங்கி கணக்கில் இடம் பெற்றிருக்கும் வசதிகள் மற்றும் சலுகைகள் குறித்து வங்கிகள் விவரிக்கும் போது, 4 முறை சேவைக்கட்டணம் இன்றி பணம் எடுக்கும் வசதி உள்ளிட்ட இலவச வங்கிச் சேவை அளிக்கப்படும் என்பதோடு, மதிப்புக் கூட்டு வங்கிச் சேவைகளுக்கும் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றே குறிப்பிடுகிறது.

வங்கிக் கணக்கில் 4 பணப் பரிமாற்றத்துக்கு பிறகான பரிமாற்றத்தை, வங்கியின் மதிப்புக்கூட்டு சேவையாகவே ரிசர்வ் வங்கியும் கருத்தில் கொள்கிறது. ஆனால், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் தனது வாக்குறுதிகளை மீறி, 4 முறைக்குப் பிறகான பணப்பரிமாற்றத்துக்கு மிக அதிக கட்டணத்தை எஸ்.பி.ஐ. வங்கி வசூலித்துள்ளது. அதாவது என்.இ.எப்.டி., ஐ.எம்.பி.எஸ்., யு.பி.ஐ., பி.எச்.ஐ.எம்.- யு.பி.ஐ., பணஅட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளின் பெயரில் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கு ரூ.17.70 என்ற அடிப்படையில் கட்டணம் வசூலித்துள்ளது.

ரிசர்வ் வங்கி இதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால், தனியார் வங்கிகளும் இதேபோல வாடிக்கையாளர்களிடம் கூடுதல் சேவைக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளதாக ஐ.ஐ.டி. ஆய்வு கூறுகிறது. குறிப்பாக, ஐ.டி.பி.ஐ. வங்கி அதன் வாடிக்கையாளர்களிடம் 4 முறைக்குப் பிறகான ஒவ்வொரு பணமில்லா டிஜிட்டல் பரிமாற்றத்துக்கும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ரூ. 20 என்ற அளவில் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்துள்ளதையும் ஏடிஎம் சேவைக் கட்டணமாக ரூ.40 வசூலிக்க ஆரம்பித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories