இந்தியா

தடுப்பூசிக்கே பற்றாக்குறை இருக்கையில் எப்படி இது திருவிழாவாகும்? - மோடி அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி!

தடுப்பூசி மட்டுமல்லாது, மற்ற தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசிக்கே பற்றாக்குறை இருக்கையில் எப்படி இது திருவிழாவாகும்? - மோடி அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் தடுப்பூசிகளுக்கான உற்பத்தியை அதிகரிப்பதற்கும், விநியோகங்களை அதிகரிப்பதற்கும் அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் முன்வைத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வருகிறது. லாக்டவுனும் போடப்பட்டுள்ளது. இப்போதைக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, தடுப்பூசிதான். 45 வயதிற்கு மேற்பட்ட எல்லாருக்குமே 100 சதவீதம் தடுப்பூசி போட மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

அதற்காகத்தான், ஏப்ரல் 14 முதல் 16ஆம் தேதி வரை அந்தந்த மாநிலங்களில் தடுப்பூசி திருவிழா நடத்தவும், அன்றைய தினங்களில் தகுதி வாய்ந்த எல்லாருக்கும் தடுப்பூசி போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை அடுத்து, ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

“மற்ற தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கி அதனை தயாரிக்க உதவ வேண்டும். இப்போது போடப்படும் கோவிஷீல்டு, கோவாக்சினை மட்டுமே வைத்து கொண்டு, 138 கோடி மக்களுக்கும் தடுப்பூசியை போட முடியாது. அது போதுமானதாகவும் இருக்காது. அதனால், நாட்டில் கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், விநியோகங்களை அதிகரிப்பதற்கும் மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கும் அரசு அனுமதி வழங்க வேண்டும். அதேபோல, அவைகளை உற்பத்தி செய்யவோ, அல்லது பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவோ அனுமதிக்க வேண்டும். இந்த தடுப்பூசி இயக்கத்தை “திருவிழா” என்று மத்திய அரசு சொல்ல விரும்புகிறது.

தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருக்கும்போது இது எப்படி திருவிழாவாகும்? கற்பனையாக கூட அப்படி திருவிழாவாக இருக்க முடியாது. தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை நிர்வாக ரீதியாக குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள அரசு, சொல்லாட்சி மற்றும் மிகைப்படுத்தி சொல்வதன் மூலம் அதன் மிகப்பெரிய தோல்வியை மூடி மறைக்கிறது.

சர்வதேச அளவில் தடுப்பூசி போடுவதையும், தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்வதை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள்தான் முதலில் வலியுறுத்தினோம். தடுப்பூசி என்பது நடைபெறும் ஒரு இயக்கமாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories