இந்தியா

“கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தளர்வடைந்து விட்டோம்” - ஒப்புக்கொண்ட பிரதமர் மோடி!

பிரதமர் தலைமையில் நடந்த முதலமைச்சர்களுடனான கொரோனா ஆலோசனைக் கூட்டத்தில் ஒட்டுமொத்த ஊரடங்கு தேவையில்லை என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

“கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தளர்வடைந்து விட்டோம்” - ஒப்புக்கொண்ட பிரதமர் மோடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 1 லட்சத்திற்கும் அதிகமாகப் பதிவாகி வருவது மக்களை அச்சத்திற்குள்ளாக்கி வருகிறது.

இதனால் பல முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஏப்ரல் 10 முதல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். பிரதமர் தலைமையில் நடந்த முதலமைச்சர்களுடனான கொரோனா ஆலோசனைக் கூட்டத்தில் ஒட்டுமொத்த ஊரடங்கு தேவையில்லை என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவுகிறது. மக்கள் மிகவும் அலட்சியமாக இருக்கின்றனர். மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நிர்வாகமும் தளர்வடைந்து விட்டது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 14 வரை கொரோனா தடுப்பூசி திருவிழாவை நடத்த வேண்டும்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கட்டும், ஆனால், கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துங்கள். கொரோனா பரவியவர்களை கண்டறிதலும், கண்காணித்தலுமே வைரஸ் பரவலை தடுப்பதற்கான வழிகள்.

கொரோனா சூழலை சமாளிக்க மாநில முதல்வர்கள் பரிந்துரைகளை வழங்க வேண்டும். நோயாளிகளைப் பற்றிய விரிவான தரவு நம்மிடம் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி நாம் வெல்வோம்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்” என உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories